‘இன்னும் 24 மணி நேரத்தில் நான் கைது செய்யப்படலாம் என்பதை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யா தெரிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க.வைச் சேர்ந்தவர் திருச்சி சிவா. மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது மகன் சூர்யா. இவர், கடந்த மே 8-ம் தேதி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அப்போது, தி.மு.க.வை குடும்பக் கட்சி என்று குற்றம்சாட்டிய சூர்யா, ஒரு குடும்பத்துக்கு உழைப்பதற்கு பதில் பா.ஜ.க.வில் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். இதனிடையே, நேற்று தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சூர்யா, ஜி ஸ்கொயர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேட்டியளித்தார். அப்போது, “ஜி ஸ்கொயர் போல 40 நிறுவனங்கள் தி.மு.க. தலைமையிடம் இருக்கிறது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக இவை பயன்படுத்தப்படுகின்றன. சென்னையில் காவேரி மருத்துவமனை, திருச்சியிலுள்ள அனைத்து மருத்துவமனைகள் என எல்லாமே கே.என்.நேரு கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது. 4 பேர் சொல்வதைத்தான் கேட்பார்” என்றார்.
இந்த நிலையில்தான், இன்று மதியம் திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் சூர்யா. அப்பதிவில், “இன்னும் 24 மணி நேரத்தில் நான் கைது செய்யப்படலாம் என்பதை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இது நடக்கும் என்று தெரியும். உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு நன்றி. பொய் வழக்குகளை போடுவது தி.மு.க.வுக்கு பெரிய விஷயம் அல்ல. எதையும் சந்திக்கக் கூடிய மன நிலையில்தான் நான் இருக்கிறேன். வாருங்கள் வருக. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நாட்கள் எண்ணப்படுகின்றன. எங்கள் தலைவர் உங்கள் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டும் வரலாற்று சிறப்புமிக்க நாளை ஏற்படுத்துவார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இவரது இந்த பதிவுதான் பா.ஜ.க.வினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.