ஹிந்து அமைப்புகளை கலந்து ஆலோசிக்காமல், விநாயகர் சதுர்த்தி தேதியை தி.மு.க. அரசு தன்னிச்சையாக அறிவித்திருக்கிறது. இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கும் ஹிந்து அமைப்புகள், தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
2023-ம் ஆண்டுக்கான பஞ்சாங்க அடிப்படையில், விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18-ம் தேதி என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசின் பொது விடுமுறை பட்டியலில் செப்டம்பர் 17-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கூறுகையில், “விநாயகர் சதுர்த்தி என்பது ஹிந்துக்களின் முழு முதற் கடவுளான விநாயகர் பெருமாளின் அவதார தினமாகும். இது ஆவணி மாத அமாவாசையைத் தொடர்ந்து வரக் கூடிய வளர்பிறை சதுர்த்தி தினமாகும். அதன்படி பார்த்தால், 2023-ம் ஆண்டு ஆவணி அமாவாசையைத் தொடர்ந்து வரக் கூடிய சதுர்த்தியானது, செப்டம்பர் 18-ம் தேதி காலை 11.39 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை 11.50 வரை உள்ளது.
ஹிந்துக்களின் மரபுப்படி, இரவு நேரத்துக்குப் பிறகு வரக்கூடிய மிச்ச நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஆகவே, செப்டம்பர் 18-ம் தேதிதான் விநாயகர் சதுர்த்தி விரதம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதன்படியே, ஹிந்து முறைப்படியான காலண்டர்களிலும், பஞ்சாங்கங்களிலும், செப்டம்பர் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமலும், ஹிந்து மதத்தைச் சேர்ந்த மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் ஆன்மிகப் பெரியவர்களை கலந்து ஆலோசிக்காமலும், செப்டம்பர் 17-ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்று தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக அறிவித்திருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. இது, ஹிந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் செயலாகும். குறிப்பிட்ட ஒரு மதத்தின் பண்டிகையை, அந்த மதத்தில் நம்பிக்கை கொண்டவர்களும், ஆன்மிக பெரியவர்களும்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அரசாங்கம் அல்ல.
உதாரணமாக, இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜான், பிறை தெரியும் நாளைப் பொறுத்து முஸ்லீம் தலைவர்களால் முடிவு செய்யப்படுகிறது. இப்படித்தான், முஸ்லீம்களின் இதர பண்டிகையும். அதேபோல, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட கிறிஸ்தவ பண்டிகைகள் அனைத்தும் கிறிஸ்தவ மதத் தலைவர்களால் முடிவு செய்யப்படுகிறது. இதுபோன்ற மதத் தலைவர்கள் முடிவு செய்யும் தேதியும், அரசு அறிவித்த தேதியும் மாறுபடும்போது, அரசு அறிவித்த தேதியை மாற்றிக் கொள்கிறது. ஆகவே, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறை தேதியை, செப்டம்பர் 18-ம் தேதியாக உடனடியாக மாற்றி அறிவிக்க வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, ஹிந்து மதத்தைச் சேர்ந்த மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் ஆன்மிக பெரியவர்களின் ஆலோசனையை பெற வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி இருக்கின்றன.
விநாயகர் சதுர்த்தி தேதி மாற்றி அறிவிக்கப்படுமா… பொறுத்திருந்து பார்ப்போம்!