விருதுநகரில் பைக் பேரணி செல்ல முயன்ற கிரீடா பாரதி அமைப்பினரை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. ஆகவே, சுதந்திர தின நிறைவு விழாவைக் கொண்டாட கிரீடா பாரதி அமைப்பு ஏற்பாடு செய்தது. கிரீடா பாரதி என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு கிளை அமைப்பாகும். இந்த அமைப்பு விளையாட்டு மூலம் கல்வியைக் கொண்டு செல்வது மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசியக் கொடி ஏந்தியபடி பைக் பேரணி சென்று 75-வது சுதந்திர தின நிறைவு விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று காலை 8.55 மணிக்கு நாடு முழுவதும் 223 இடங்களில் கிரீடா பாரதி அமைப்பினர் பைக் பேரணிக்கு தயாராகினர். அந்தவகையில், தமிழகத்தில் விருதுநகரிலும் கிரீடா பாரதி அமைப்பினர் பைக் பேரணிக்கு தயாராகினர். ஆனால், இதையறிந்த காவல்துறையினர், கிரீடா பாரதி அமைப்பினரின் பைக் பேரணிக்கு தடை விதித்தனர். இத்தனைக்கும் மேற்படி பைக் பேரணி நடத்த மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதை கிரீடா பாரதி அமைப்பினர் சுட்டிக்காட்டியபோதும், போலீஸார் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பைக் பேரணிக்குத்தானே அனுமதி இல்லை. நாங்கள் நடந்தே பேரணி செல்கிறோம் என்று கூறி, கிரீடா பாரதி அமைப்பினர் கையில் தேசியக்கொடியை ஏந்தியவாறு பேரணியாக நடந்து சென்றனர். ஆனால், இதையும் தடுத்து நிறுத்திய போலீஸார், கிரீடா பாரதி அமைப்பினரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, அனுமதி இருந்தும் காவல்துறையினர் அனுமதி மறுத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், கிரீடா பாரதி அமைப்பினரின் பைக் பேரணி நாடு முழுவதும் சிறப்பாக நடந்து முடிந்தது.