ராஜிவ் காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளனை கட்டித் தழுவிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுபோன்ற செயல்கள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாகவும், நாட்டின் அரசியல் கலாசாரத்திற்கு நல்லதல்ல என்றும் தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கத்தில், “1991-ம் ஆண்டு மே மாதம் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், முன்னாள் பிரதமரை கொன்ற குற்றவாளியை ஒரு மாநிலத்தின் முதல்வர் கட்டித் தழுவியது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருப்பது வேறு விஷயம். ஆனால், முன்னாள் பிரதமரை கொன்றவரை, ஒரு மாநிலத்தின் முதல்வர் கட்டிப்பிடித்து வாழ்த்துவது என்ன வகையான அரசியல் கலாசாரம்? என்பது தெரியவில்லை. ராஜிவ் காந்தி கொலையாளியை வரவேற்று ஸ்டாலின் சாதித்தது என்ன? அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற செயல்கள் நிறுத்தப்பட வேண்டும். முன்னாள் பிரதமரை கொன்றவரை கண்ணியப்படுத்துவது ஆபத்தான முன்னுதாரணமாகும். பிரதமர் நரேந்திர மோடியும் இதை எதிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறது.
மேலும், இதுகுறித்து சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறுகையில், “கடந்த காலங்களில் பயங்கரவாதிகள் பாராட்டப்பட்டு, கொண்டாடப்பட்டனர் ஆனால், அது விமர்சனங்களையும், எதிர்ப்பையுமே சந்தித்தது. பல காலிஸ்தானி தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களால் பாராட்டப்பட்டனர். இந்திரா காந்தி கொலையாளிகளும் கொண்டாடப்பட்டனர். ஆனால், மக்கள் அதை ஏற்கவில்லை. சில அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் காஷ்மீர் பயங்கரவாதிகளை சுதந்திரப் போராட்ட வீரர்களாக சித்தரிக்க முயன்றனர். அதற்கும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆகவே, முன்னாள் பிரதமரின் கொலையாளிக்கு ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்திருப்பது தவறானது. நமது அரசியல் கலாசாரத்துக்கும் பொருந்தாது” என்று தெரிவித்திருக்கிறார்.
ஆக, பேரறிவாளனை கட்டித் தழுவிய ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.