தி.மு.க. அரசின் அடாவடியால் முதியவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ரவுடிகள், குண்டர்களின் அட்டகாசம் அதிகரித்திருக்கிறது. இதனால், கொலை மற்றும் கொள்ளைகள் தொடர்கதையாக இருக்கின்றன. அதேபோல, பாலியல் பலாத்கார சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஓராண்டு காலத்தில் 4000-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தவிர, மதமாற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. கிராமங்களில் மக்களை மதம் மாற்றியது மட்டுமல்லாது பள்ளிக் குழந்தைகளையும் மதமாற்றும் செயலில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, ஆக்கிரமிப்பு அகற்றம் என்கிற பெயரில் தி.மு.க. அரசு செய்யும் அராஜகத்துக்கு அளவே இல்லை. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே முதல்வர் ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்கிற பெயரில் ஏழை எளிய அப்பாவி மக்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். தற்போது, சென்னை ஆர்.ஏ..புரத்தில் ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் மீண்டும் தி.மு.க. அரசின் அட்டூழியம் அரங்கேறி வருகிறது. இதில் ஒரு அப்பாவி முதியவர் ஒருவர் தீக்குளித்ததுதான் பரிதாபம். ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று காலையில் தொடங்கி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் கண்ணையா என்பவரின் வீட்டையும் புல்டோசர் கொண்டு இடித்தனர். இதனால் மனமுடைந்த கண்ணையா, திடீரென மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, சம்பவ இடத்தில் இருந்த போலீஸார் கண்ணையாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்ணையா தீக்குளித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களும், இளைஞர்களும் அங்கிருந்த அரசு வாகனங்கள் மற்றும் புல்டோசர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேசமயம், டெல்லியில் ஆக்கிரமிப்பை அகற்றியபோது பா.ஜ.க. அரசின் அட்டூழியம். பாசிச பா.ஜ.க. அரசு. மதவெறியை தூண்டும் பா.ஜ.க. அரசு என்று கூக்குரல் எழுப்பினார்கள் தி.மு.க. உ.பி.ஸ்களும், அதன் கூட்டணிக் கட்சியினரும், போலி போராளிகளும், தமிழக மீடியாக்களும். ஆனால், இன்று அதே ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஏழை எளிய அப்பாவி மக்களின் வீடுகளை புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி வருகிறது தி.மு.க. அரசு. ஆனால், எதிர்த்துக் குரல் கொடுப்பார்தான் யாருமில்லை. ஊடகங்களும், போராளிகளும் நவத்துவாரங்களையும் மூடிக் கொண்டு கப்சிப் என்றிருக்கின்றன என்று குற்றம்சாட்டுகிறார்கள் சாமானிய மக்கள்.