டாஸ்மாக்கில் கட்டாய வசூல்: அம்பலமான ‘கரூர் கம்பெனி’!

டாஸ்மாக்கில் கட்டாய வசூல்: அம்பலமான ‘கரூர் கம்பெனி’!

Share it if you like it

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதின் மூலம், அரசு மதுபானக் கடைகளில் வசூலில் ஈடுபட்டது கரூர் கம்பெனிதான் என்கிற ரகசியம் அம்பலமாகி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அனைத்து அரசுத் துறைகளிலும் வசூல் களை கட்டுகிறது. காரணம், ஆளும்கட்சியினருக்கு கப்பம் கட்ட வேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார்கள். குறிப்பாக, அமைச்சர் செந்தில்பாலாஜியின் வசமிருக்கும் டாஸ்மாக் அரசு மதுபானக் கடைகளில் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் கரூர் கம்பெனி என்கிற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதாவது, மாநகரம், நகரம், பேரூராட்சி, கிராமம் என டாஸ்மாக் கடைகளை வகைப்படுத்தி, விற்பனையைப் பொறுத்து கடைக்கு 10,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை மாதந்தோறும் கப்பம் வசூல் செய்வதாக குற்றாச்சாட்டு எழுந்தது. ஆனால், அமைச்சர் செந்தில்பாலாஜியோ, இதை முற்றிலுமாக மறுத்திருந்தார். இந்த சூழலில், தீபாவளி பண்டிகைக்கு முன்பு, அரசு மதுபானக் கடைகளில் சிலர் வசூலில் ஈடுபடுவதுபோன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல அமைச்சர் செந்தில்பாலாஜி பேசிவந்தார்.

இந்த நிலையில்தான், கரூர் கம்பெனி என்கிற பெயரில் டாஸ்மாக் அரசு மதுபானக் கடைகளில் கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடுவதை கண்டித்து டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் சேலத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது. இதுகுறித்து பேசிய டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன், “கரூர் கம்பெனி என்கிற பெயரில் ஆளும்கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினர் டாஸ்மாக் கடைகளில் மாதந்தோறும் 10,000 ரூபாய் 40,000 ரூபாய் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர். பணியாளர்களை அலைகழித்து துன்பப்படுத்தி வருகிறார்கள். ஆகவே, இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு டாஸ்மாக் கடைகளில் நடக்கும் கட்டாய வசூலை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இதன் மூலம், கரூர் கம்பெனி என்கிற பெயரில் ஆளும்கட்சியினர் டாஸ்மாக் கடைகளில் வசூலில் ஈடுபடுவது உண்மை என்பது அம்பலமாகி இருக்கிறது. மேலும், அமைச்சர் செந்தில்பாலாஜி, போலியான மதுபானங்களை தயாரித்து, அரசு டாஸ்மாக் கடை பார்களில் ரகசியமாக புகுத்தி விட்டு, கல்லா கட்டுவதாகவும் தகவல்கள் றெக்கை கட்டுகின்றன.


Share it if you like it