மசூதி கட்டுவதற்காக 36,000 கோவில்கள் இடிப்பு: கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பகீர் தகவல்!

மசூதி கட்டுவதற்காக 36,000 கோவில்கள் இடிப்பு: கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பகீர் தகவல்!

Share it if you like it

முகலாய ஆட்சியாளர்களால் கடந்த காலங்களில் சுமார் 36,000 ஹிந்து கோவில்கள் அழிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டிருக்கிறது என்று குற்றம்சாட்டிய பா.ஜ.க. மூத்த நிர்வாகியும், கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, மேற்படி கோவில்கள் அனைத்தையும் ஹிந்துக்கள் சட்டப்படி மீட்பார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் இருக்கும் பழமையான மசூதிகள் ஹிந்து கோயில்களை இடித்து விட்டு கட்டப்பட்டவைதான் என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், பல்வேறு சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. உதாரணமாக, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, ராமர் கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்டது என்று கூறிவந்தனர். தொல்பொருள் ஆராய்ச்சியில் இது நிரூபிக்கப்பட்டு, தற்போது அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல, மதுராவில் உள்ள ஷாஜி ஈத்கா மசூதி கிருஷ்ணர் கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும், காசி விஸ்வநாதர் கோவில் அருகேயுள்ள ஞானவாபி மசூதியும் விஸ்வநாதர் ஆலயத்தை இடித்து விட்டு கட்டப்பட்டது என்ற தகவல் உலா வருகிறது. சமீபத்தில் நடத்திய ஆய்வில், அந்த மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், நாடு முழுவதும் 36,000 கோயில்களை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்று அதிர்ச்சித் தகவலை கூறியிருக்கிறார் கர்நாடக மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கே.எஸ்.ஈஸ்வரப்பா. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நேற்று நடந்த பேரணியில் பேசிய கே.எஸ்.ஈஸ்வரப்பா, “ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ஜாமியா மசூதி ஒரு காலத்தில் ஹனுமான் கோவிலாக இருந்த இடம். அந்த கோயிலை இடித்து விட்டுத்தான் மொகலாயர்கள் மசூதியை கட்டினார்கள். இதேபோல, நாடு முழுவதும் 36,000 கோயில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டிருக்கிறது. ஆகவே, அவர்கள் வேண்டுமானால் வேறு இடத்தில் மசூதி கட்டி தொழுகை நடத்திக் கொள்ளட்டும். எங்கள் கோவில்களுக்கு மேல் மசூதி கட்டுவதை அனுமதிக்க முடியாது. சட்டப்படி அனைத்து ஹிந்து கோயில்களும் மீட்கப்படும் என்பதை நான் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 21-ம் தேதி கர்நாடகாவில் மந்திர், மஸ்ஜித் சர்ச்சை எழுந்தது. அதாவது, மங்களூருவின் புறநகரில் உள்ள ஒரு பழைய மசூதியின் அடியில் ஹிந்து கோவில் போன்ற கட்டடக்கலை வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே, அந்த இடத்தில் மசூதி கட்டப்படுவதற்கு முன்பு கோவில் இருந்ததாக கூறுகின்றனர். ஆகவே, ஆவணங்கள் சரிபார்க்கும் வரை சீரமைப்புப் பணிகளை நிறுத்த வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, தெலங்கானா மாநிலத்திலும் சர்ச்சை வெடித்திருக்கிறது. இம்மாநிலத்திலும் பல கோயில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டதாக மாநில பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் குற்றம்சாட்டினார். மேலும், இந்த மசூதிகள் தோண்டப்பட்டால் சிவலிங்கங்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் பாண்டி சஞ்சய் தெரிவித்தார். இதற்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்திருந்தார். ஆகவே, அவருக்கு சவால் விடுத்திருக்கும் பண்டி சஞ்சய், “தெலுங்கானாவில் உள்ள அனைத்து மசூதிகளையும் தோண்டுவோம். எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், மசூதிகளை உங்ர்களிடமே விட்டு விடுகிறோம். ஆனால், சிவலிங்கங்கள் கிடைத்தால், அவற்றை நாங்கள் கைப்பற்றுவோம்” என்று சொல்லி இருக்கிறார். இதற்கிடையே, ராமசேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறுகையில், “அமைதி காக்கப்பட வேண்டும் என்றால், முஸ்லிம் சமூகத்தால் அழிக்கப்பட்டு மசூதிகளாக மாற்றப்பட்ட அனைத்துக் கோவில்களையும் ஹிந்துக்களிடமே திருப்பித் தர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it