கோவில்கள் பழமையானவை என்றால் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என அறிவிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு !

கோவில்கள் பழமையானவை என்றால் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என அறிவிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு !

Share it if you like it

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் கடந்த (ஆகஸ்ட் 16) விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “தமிழக அரசு 99 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ள சர்வதேச வள்ளலார் மையத்துக்கு தேவையான சுற்றுச்சூழல் அனுமதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, நகரமைப்பு திட்ட அனுமதி உள்ளிட்ட அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன” எனக் கூறி, அதுதொடர்பான மனுவைத் தாக்கல் செய்தார்.

ஆனால், சர்வதேச மையம் கட்டிக் கொடுத்து சத்திய ஞான சபையை அரசு எடுத்துக் கொள்ளப் போவதாக மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சர்வதேச மையம் கட்டப்பட்டு, மீண்டும் அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும் என விளக்கம் அளித்தார்.

மேலும், காலி நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ள அடிக்கல் நாட்டும் பணிகள் துவங்கிய போது, அந்த இடம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்பட்டதை அடுத்து, தொல்லியல் துறைக் குழுவினர் அந்த நிலத்தை ஆய்வு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதிகள், ஜோதி தரிசனத்துக்கு இடையூறு இல்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்வதில் என்ன ஆட்சேபம் உள்ளது? அதன் மூலம் பக்தர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படுகிறது? என மனுதாரர்கள் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, வள்ளலார் திருவருட்பா பாடல்களில் ஜோதி தரிசனத்துக்காக பெருவெளியை அப்படியே வைத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்யலாம். எனவே, வேறு இடத்தில் சர்வதேச மையம் கட்டலாம் எனவும், 100 ஆண்டுகளுக்கும் மேலான இந்த கோயில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை பாதுகாக்க வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து, இதுவரை இந்த இடத்தை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவிக்காத நிலையில் எப்படி ஆட்சேபம் தெரிவிக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, அரசுத் தலைமை வழக்கறிஞர், “கோயில் புராதனச் சின்னம் தான். கோயிலை அரசு தொடப் போவதில்லை. ஆனால், அந்த நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததா? என, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு நியமித்த நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அந்த குழு, இந்த நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என அறிக்கை அளித்துள்ளது” என்றார்.

அதேநேரம், தொல்லியல் துறை காரணமாக உயர் நீதிமன்றத்திலும் கூட மேம்பாட்டுப் பணிகளை துவங்க முடியவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள கோயில்களை ஆய்வு செய்து, நூறு ஆண்டுகள் பழமையானவை எனக் கண்டறிந்தால் அவற்றை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என அறிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தொல்லியல் துறை அமல்படுத்த வேண்டும் என்றனர். மேலும், வழக்கில் வாதங்கள் நிறைவு பெறாததால் விசாரணையை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *