மதுரை மாவட்டத்தில் உள்ள உத்தப்புரத்தில் மிகவும் பழமையான முத்தாலம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு அங்கு தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டதால் இரு சமூக மக்களிடையே பிரச்சனை எழுந்தது. இதனால் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இரு சமூக மக்களும் சமரசமாக செல்வதாக கூறி ஒரு சமூகத்தினர் கோவிலை நிர்வகிக்கவும், மற்றொரு சமூகத்தினர் கோவில் வழிபாட்டினை பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மீண்டும் இரு சமூக மக்களிடையே பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து அந்த கோவில் முழுவதுமாக பூட்டி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உத்தப்புரத்தை சேர்ந்த பாண்டி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் கோவிலை மக்கள் வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக கோவிலில் உள்ள சுவாமிகளுக்கு பூஜைகள் நடத்த முடியவில்லை. கோவில்களை பூட்டி வைத்திருப்பது சுவாமிக்கு சிறை வைப்பதற்கு சமம். குற்றங்கள் செய்து சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கே சரியான நேரத்தில் உணவு உடை என அனைத்தும் கிடைக்கும் பொழுது, பக்தர்கள் வணங்கக்கூடிய கோவிலை பூட்டி வைத்து பூஜைகள் நடைபெறாமல் இருப்பதை அதிகாரிகள் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க கூடாது.
அதனால் இந்த வழக்கில் கோவிலை திறந்து வழக்கம்போல் மக்கள் பூஜைகள் செய்யலாம். இதில் யார் பிரச்சனை செய்கிறார்களோ அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி கோவிலை பூட்டி வைக்க கூடாது என உத்தரவிட்டார்.