சென்னை அயனாவரம் சத்தியமூர்த்தி காலனி பகுதியை சேர்ந்த சந்தான லக்ஷ்மி என்பவர் தனக்கு சொந்தமான 1304 சதுர அடி கொண்ட நிலத்தை அளவிட வேண்டி சென்னை அயனாவரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் 700 ரூபாயை செலுத்தி பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 27 ஆம் தேதி சந்தான லக்ஷ்மியின் நிலத்தை சர்வேயர் ரஞ்சித் குமார் நேரில் சென்று அளந்து அதற்கான அத்தாட்சி படிவத்தை சந்தான லக்ஷ்மியின் மகனிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் நிலத்தை எதிர் தரப்பினருக்கு சாதகமாக அளந்து விட்டதாக நில உரிமையாளர் சந்தான லக்ஷ்மியின் ஆதரவாளரும், விசிக நிர்வாகியுமான அசோக் என்பவர் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பெண் ஊழியர்கள் உட்பட அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறில் ஈடுபட்டு வந்த அசோக்கை தாசில்தார் ரமேஷ் இதுகுறித்து கேள்வி எழுப்பியதால் அவரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தாசில்தார் ரமேஷ் அசோக்கை அங்குள்ள அறையில் பூட்டி வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்தநிலையில் அசோக் தாசில்தார் ரமேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து போலீசார் வருவதற்குள் தப்பி ஓடியுள்ளதாக புகாரளித்துள்ளார். இதுதொடர்பாக தாசில்தாரை தாக்கிய அசோக் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.