இந்தியாவில் இருந்து மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய 2024-ம் ஆண்டிற்கான மாணவர் விசா பருவத்தை இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் துணைத் தூதரகங்களும் விரிவுப்படுத்தியுள்ளன.
இந்திய மாணவர்களுக்கான உயர்கல்வி இலக்காக அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. மற்ற இடங்களைக் காட்டிலும் அமெரிக்கக் கல்வியையே 69 சதவீத இந்திய மாணவர்கள் விரும்புவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
அமெரிக்காவில் உள்ள சர்வதேச பட்டதாரி மாணவர்களின் மிகப்பெரும் பிரிவாக ஏற்கெனவே திகழும் இந்திய மாணவர்கள், வேலைவாய்ப்பு அடிப்படையிலான அமெரிக்க விசாக்களைப் பெற்றோ அல்லது இந்தியாவில் தங்கள் துறைகளில் தலைவர்களாக உருவெடுத்தோ, மதிப்புமிக்க உலக அனுபவத்தைத் தொடர்ந்து பெறுகிறார்கள். அமெரிக்கக் கல்வியின் வாழ்நாள் பயனை இது பிரதிபலிக்கிறது.
கல்விக்காக அமெரிக்காவை தேர்ந்தெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த மாணவர் விசாக்களைவிட அதிக மாணவர் விசாக்களை 2023-ம் ஆண்டில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வழங்கியுள்ளது. 2021 மற்றும் 2023-க்கு இடையில் மற்ற அனைத்து வகை விசாக்களுக்கான தேவை 400 சதவீத உயர்வைச் சந்தித்தபோதும், மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அவர்களின் பயணத்தை எளிதாக்குவதற்கும் அமெரிக்க அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை முன்னெப்போதும் கண்டிராத இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.
அந்த வகையில், எட்டாவது ஆண்டு மாணவர் விசா தினத்தில் (ஜூன் 13), இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகப் பணியாளர்கள், 3,900 மாணவர் விசா விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்தனர். ‘விண்ணப்பதாரர்களுடன் தூதரக மற்றும் எஜுகேஷன் யூஎஸ்ஏ (EducationUSA) ஊழியர்கள் உரையாடி அமெரிக்க கல்வி குறித்த தகவல்களை பகிர்தல்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே தொடர்ந்து வளர்ந்து வரும் கல்வி உறவுகளை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை அமெரிக்க தூதரகம் வெளிப்படுத்தியது.
இந்திய மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்த தூதர் எரிக் கார்செட்டி, “அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள ஒவ்வொரு சர்வதேச மாணவரும் சாதனையாளர் ஆவார். கல்வியில் சிறந்து விளங்குவதற்கான பல வருட கடின உழைப்பை அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். இதற்குமுன் அமெரிக்காவுக்கு சென்ற மாணவர்களை போன்றே இன்றைய இந்திய மாணவர்களும் மிகப்பெரும் ஆற்றல் வளத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
நீங்கள் பெறும் கல்வியறிவு, புதிய திறன்கள் மற்றும் வாய்ப்புகள், மேலும் நீங்கள் உருவாக்கும் உறவுகள் உங்கள் கல்வி முதலீட்டிக்கு தகுந்தவையே ஆகும். ஒவ்வொரு மாணவரும் இந்தியாவின் தூதுவர். நாம் ஒன்றிணைந்து அமெரிக்கா-இந்திய உறவை முன்னோக்கிக் கொண்டுசெல்கிறோம்” என்று குறிப்பிட்டார்.