மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பணியாளர்களை ஏற்றி சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
பெதுல் மக்களவை தொகுதியில் உள்ள கவுலா கிராமத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் பணியாள்கள் பேருந்து ஒன்றில் நேற்று இரவு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது பேருந்தில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர். எனினும் நான்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேதம் அடைந்தன.
பேருந்தில் ஏற்பட்ட தீப்பொறியால் தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஆட்சியர் கூறினார். இந்த தீ விபத்தில் 275, 276, 277, 278, 279 மற்றும் 280 ஆகிய நான்கு வாக்குச் சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடைந்ததாக மாவட்ட ஆட்சியர் சூர்யவன்ஷி கூறினார்.
இச்சம்பவத்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர், இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்புவதாகவும், பாதிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு செய்வது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.