விளாத்திகுளம் அருகே தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிங்கிலிபட்டிக்கு அருகில் விளாத்திகுளம், சித்தவன்நாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, வேலிடுபட்டி, சிங்கிலி பட்டி, பேரிலோவன்பட்டி வழியாக கோவில்பட்டிக்கு செல்லும் அரசு பேருந்து விளாத்திகுளத்தில் இருந்து இன்று காலை 8.10 மணிக்கு புறப்பட்டது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தினால் விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் நிரந்தர ஓட்டுநர் இருந்தும் தற்காலிக ஓட்டுநர் சுப்பிரமணி பேருந்தை இயக்கினார்.
இந்த பேருந்தில் 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயணித்துள்ளனர். இந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பல மாணவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.