தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “ஒரு எளிமையான, யதார்த்தமான, தைரியமான, மனிதநேயமிக்க ஒரு நண்பரின் மறைவுக்குப் பின்னால், ஒரு ஆழ்ந்த அமைதியை நானே உருவாக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன் கொஞ்ச நேரம்…
என் தந்தை கேன்ஸரால் பாதிக்கப்பட்டு தன் கடைசி நாளில் ஆழ்வார்பேட்டை தேவகி ஆஸ்பத்திரியில் மிகவும் சிரமப்பட்ட போது,வாசலில் இருந்த பிள்ளையார் கோவிலில் வேண்டிக்கொண்டேன்.
மீண்டு வருவாரேயானால் சரி,அல்லது சிறிதே காலம் அதுவும் இப்படித்தான் கஷ்டப் பட்டபடி வாழ்வாரேயானால் அவரை நிம்மதியாக உன்னிடம் அழைத்துச்செல் என்று துக்கத்தின் உச்சத்தில் வேண்டிக்கொண்டேன். அப்படி விஜயகாந்த் சாரை சிரமப்படும் மனிதராக எனக்கு பார்க்கப் பிடித்ததில்லை.நான் யாரென உலகம் ஒப்புக்கொள்ளுமுன்,என் முதல் படத்தைத் துவக்கி வைத்தவர், நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக முதலிடத்தைப் பெற்றவர்.வாழ்வு விரைந்து முடிந்து விட்டாலும்,கோடானுக்கோடி உள்ளங்களை ஆட்கொண்ட அருமை மனிதர்.கோடீஸ்வரன் மறைவுக்கு தெரு வரை கூட கூட்டம் இருக்காது. கட்டுக்கடங்கா கூட்டத்தால் தீவுத்திடலுக்கு மாற்றலும், மத்திய மாநில அரசு மரியாதையும் சும்மா வந்து விடாது.அவர் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருந்தது.அது சினிமாவில் வந்ததோ அரசியலில் வந்ததோ அல்ல.அவர் வளர்த்த மனிதநேய மாண்பிற்கு கிடைத்த மரியாதை. மரியாதை மிகுந்தவரின் பிரிவு தரும் துயரத்தை விட, அவரது உள்ளத்தின் உயர்வு ஒரு பாடமும் கற்றுத் தருகிறது.வேதனைத் தீர எழுதிக் கொண்டே போகலாம். எதுவும் ஓரிடத்தில் முடியும் அது எவ்வாறு சிறப்பாக முடிகிறது என்பதே முக்கியம். அவரைப்போல சிறந்த மனிதனாக வாழ்வதே அவருக்கான நெஞ்சார்ந்த அஞ்சலி !