மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மகாதேவ் ஆப் உள்பட 21 பெட்டிங் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு சத்தீஸ்கரில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிக்க சட்டவிரோத பெட்டிங் ஆப் மற்றும் இணையதளங்களிடம் இருந்து பணம் பெறுவதாக குற்றச்சாட்டியிருந்த நிலையில், 21 பெட்டிங் ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பரிவர்த்தனைகளை நடத்தியதற்காக அமலாக்க இயக்குநரகத்தின் (ED) கோரிக்கையின் பேரில் மொத்தம் 22 பெட்டிங் ஆப்கள் மற்றும் இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில், சத்தீஸ்கரில் உள்ள சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மகாதேவ் பெட்டிங் ஆப் அலுவலகங்களில் அமலாக்கத்துறையின சோதனை நடத்தியபோது, சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தெரியவந்ததாகவும் மின்னணு, தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மகாதேவ் பெட்டிங் ஆப் உரிமையாளர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பிரிவு 19 இன் கீழ் கைது செய்யப்பட்டார். அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு சுமார் 508 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டியது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி ஹவாலா பண மோசடியில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோதமாக கிடைத்த பணத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.