பஞ்சாபின் ஹோியார்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “புதிய விருப்பங்கள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய நம்பிக்கை ஆகியவற்றுடன் இன்று நாடு இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் மத்திய அரசு ஹாட்ரிக் அடிக்கப் போகிறது.
பல பத்தாண்டுகளுக்குப் பிறகு இது நடக்கப் போகிறது. இதற்கு மிகப்பெரிய காரணம், ‘வளர்ந்த இந்தியா’ என்ற கனவுதான். இன்று ஒவ்வொரு இந்தியரும் ‘வளர்ந்த இந்தியா’ என்ற கனவோடு ஒன்றுபட்டுள்ளனர். எனவே, நாட்டின் ஒவ்வொரு மக்களும் நம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.
நமது நாட்டு மக்கள் தற்போது வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அங்கு இந்தியா மீதும், இந்தியர்கள் மீதும் மரியாதை அதிகரித்திருப்பதை அவர்களே பார்க்கிறார்கள். நாட்டில் பலமான அரசாங்கம் இருக்கும் போது வெளிநாட்டு அரசாங்கங்கள் நமது பலத்தை கவனிக்கின்றன.
ஏழைகள் நலன் என்பது எனது அரசாங்கத்தின் ஒரு பெரிய முன்னுரிமை. கடந்த 10 ஆண்டுகளில், ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் மற்றும் இலவச சிகிச்சை வசதிகளை வழங்கியுள்ளோம். இன்று, எந்த ஏழை தாயின் குழந்தையும் பசியுடன் தூங்க வேண்டிய நிலை இல்லை. இன்று எந்த ஏழைப் பெண்ணும் தனது நோயை மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
இந்த தேர்தல் காலத்திலும், நமது அரசாங்கம் ஒரு நொடியை கூட வீணாக்கவில்லை. ஆட்சி அமைந்தவுடன் அடுத்த 125 நாட்களில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமோ அதற்கான பாதை வரைபட வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்தும் திட்டமிடப்படுகிறது. அதோடு, அடுத்த 25 ஆண்டுகாலத்திற்கான தொலைநோக்குப் பார்வையோடு நமது அரசு வேகமாக முன்னேறி வருகிறது.
காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியின் சுயநல அரசியலாலும், வாக்கு வங்கி அரசியலாலும் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வாக்கு வங்கி மீது கொண்ட மோகத்தால், நாடு பிரிந்த நேரத்தில் கர்தார்பூர் சாஹிப் நகரை இந்தியாவோடு சேர்க்க வேண்டும் என்று உரிமையை நிலைநாட்ட அவர்களால் முடியவில்லை.
இவர்கள்தான் தங்கள் வாக்கு வங்கிக்காக ராமர் கோயில் கட்டுவதை தொடர்ந்து எதிர்த்தவர்கள். தாஜா செய்யும் அரசியல் காரணமாக இண்டியா கூட்டணி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறது.
ஊழலின் தாய் காங்கிரஸ். 60 ஆண்டுகளாக காங்கிரஸ் பல ஊழல்களை செய்துள்ளது. ஊழலில் காங்கிரஸ் பிஎச்டி செய்ததாக தெரிகிறது. இப்போது மற்றொரு ஊழல் கட்சி (ஆம் ஆத்மி கட்சி) காங்கிரஸுடன் இணைந்துள்ளது. பஞ்சாபில் இவ்விரு கட்சிகளும் நேருக்கு நேர் சண்டையிடுவதாக நாடகம் நடத்துகிறார்கள். டெல்லியில் ஒன்றாக தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.