கடலூர் மாவட்டத்தில் காந்தி உள்ள பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலி அம்மாள் திருவுருவ சிலையினை இன்று அக்டோபர் (20.10.2023) முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், மாநகராட்சியில் உள்ள காந்தி பூங்காவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் திருவுருவச் சிலையினை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில், 20.10.2023 அன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
அஞ்சலை அம்மாள் கடலூர் முதுநகரில் அம்மாக்கண்ணு முத்துமணி இணையருக்கு மகளாக 1890-ம் ஆண்டு பிறந்தார். திண்ணை பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். இவர் சிறுவயது முதல் சுதந்திரப் பற்று மிக்கவராக திகழ்ந்தார்.
1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு அஞ்சலை அம்மாள் தமது பொது வாழ்க்கையை தொடங்கினார். சென்னையில் நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஒரு வருடம் சிறை தண்டனை பெற்றார். கடலூரில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று ஆங்கிலேயர்களால் ஆறு மாத கால சிறை தண்டனை பெற்றார்.
1933 ஆம் ஆண்டு சட்டமறுப்பு மறியல் போராட்டத்தில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து, கடலூரில் நடைபெற்ற அந்நிய ஆடை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து அஞ்சலையம்மாளுக்கு மூன்று மாத கொண்டதால் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 1940 ஆம் ஆண்டு நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றதால் இவருக்கு ஆறு மாதம் கடும் காவல் தண்டனை மீண்டும் 18 மாத சிறை தண்டனை,1943 ஆம் ஆண்டு எட்டு மாதம் இரண்டு வாரம் சிறை தண்டனை என மொத்தம் 4 வருடம் 5 மாதங்கள் சிறை தண்டனை பெற்றார்.
அஞ்சலையம்மாள் வேலூர் சிறையில் இருந்தபோது கருவுற்ற நிலையில் இருந்த அவரை ஆங்கிலேய அரசு வெளியில் அனுப்பிவிட்டு மகப்பேறுக்கு பின் மீண்டும் சிறையில் அடைத்தது. நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தில் தம்முடைய ஒன்பது வயது மகள் லீலாவதியை போராட்டத்தில் ஈடுபடுத்தினார். லீலாவதி சிறுமிக்கு நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
அஞ்சலையம்மாள் விடுதலைப் போராட்டத்திற்காக தனது குடும்பச் சொத்துக்களையும், குடியிருந்த வீட்டையும் விற்று, நாட்டிற்காக தியாகம் செய்தார். அஞ்சலை அம்மாள் தேச விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டார். இவரது குடும்பம் நாட்கள் வறுமையில் பல வாழ்ந்தாலும், எந்த சூழ்நிலையிலும் தேச நலனையே பெரும் மூச்சாக கொண்டு விடுதலைக்காக போராடியது அஞ்சலை குடும்பம்.
மகாத்மா காந்தியடிகள் கடலூருக்கு வந்த போது அவரை சந்திப்பதற்கு அஞ்சலை அம்மாளுக்கு ஆங்கில அரசு தடை விதித்தது ஆனால் அஞ்சலை அம்மாள் பர்தா வேடம் அணிந்து குதிரை வண்டியில் காந்தியடிகளை ஏற்றிச் சென்றார். அதனால் அஞ்சலை அம்மாளை “தென்னாட்டின் ஜான்சி ராணி” காந்தியடிகளால் அழைக்கப்பட்டார். என மகாத்மா
அஞ்சலையம்மாள் அவர்கள் 1937, 1946, 1952 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பின்னர் தனக்குத் தியாகி ஓய்வூதியம் வேண்டாம் என மறுத்தார்.
இப்பேற்பட்ட சிறப்புமிக்க சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் அவர்களின் நினைவைப் போற்றுகின்ற வகையிலும், அவரது புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையிலும் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு கடலூர் மாவட்டத்தில் புதியதாக திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை. தலைமைச் செயலகத்தில் 20.10.2023 அன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து சிறப்பிக்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.