ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்ட நம் பாரதத்தை விடுவிக்க, அந்நாளில் நாடெங்கும் நம் மக்கள் நடத்திய போராட்டங்கள் ஏராளம்! ஏராளம்!! அப்போராட்டங்களைக் கண்ட ஆங்கிலேய ஆட்சியே ‘கிடுகிடு’த்தது!
‘ரௌலட்’ சட்ட எதிர்ப்பு; சைமன் கமிஷன் பகிஷ்கரிப்பு; அந்நியத் துணி பகிஷ்கரிப்பு; ஒத்துழையாமை இயக்கம்; தனி நபர் சத்யாக்கிரகம், உப்பு சத்தியாக்கிரகம் போன்ற பல போராட்டங்கள் நிகழ்ந்தன.
நம் இந்தியர்கள் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் சாதாரண உப்புக்கு ஆங்கிலேயர் வரி விதித்தனர். இதனை எதிர்த்து காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு மார்ச்12-ஆம் தேதி, தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து தமது தொண்டர் படையுடன் “தண்டி” என்ற இடத்தில் உப்பை அள்ள, தனது பயணத்தை மேற்கொண்டார். இதுவே இந்திய வரலாற்றில் ”தண்டி யாத்திரை” என தனிச் சிறப்பும் பெற்றது.
வடக்கே காந்தியடிகள் நிகழ்த்திய ”தண்டி யாத்திரை’ யைப் போலவே, தமிழ் நாட்டிலும் “உப்புச் சத்தியாகிரகப் போராட்டம்” நடத்தும் பொறுப்பை ராஜாஜிஏற்றார். இதற்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க “வேதாரண்யம்” என்ற ஊரைத் தேர்ந்தெடுத்தார். இது உப்பளங்கள் பல நிறைந்த ஊராகும். இங்கு பெரும் செல்வந்தரும், பல உப்பளங்களுக்கு உரிமையாளருமான சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்களே இப்போராட்டத்தை முன்னின்று நடத்தி, ராஜாஜிக்கு வலது கரம் போல விளங்கியவராவார்.
மிகுந்த ஆசார சீலரும், ஆன்மீகருமான இவரிடம் தேசியம் ஊற்றெடுத்துப் பெருகியது. சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே, ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனம் தான். வேதரத்தினம் பிள்ளை தன் கைவிரலை அசைத்தாலே, வேதாரண்யம் துள்ளி எழுந்து நிற்கும், நாட்டு மக்களுக்கு அவரிடம் அத்தனை மரியாதை.
தென்னகத்தே தஞ்சை மாவட்டத்திலுள்ள சிவாலயங்களில் வேதாரண்யமும் ஒன்றாகும். வடமொழியில் அழைக்கப்படும் இவ்வூரையே தமிழில் “திருமறைக்காடு” என்றும் அழைப்பர். இங்கு திருக்கோயில் கொண்டுள்ள இறைவன் மறைக்காட்டு மணாளர். சதுர் வேதங்கள் என்றழைக்கப்படும் நான்கு வேதங்கள் இறைவனை வழிபட்டுச் செல்லுகையில், இத்தலத்தைப் பூட்டி விட்டுச் சென்று விட்டனவாம். ஒரு சமயம் சம்பந்தரும், அப்பரும் இத்தலத்திற்கு விஜயம் செய்த போது, அத்திருக்கோயில் கதவு நீண்டகாலமாகப் பூட்டியிருக்கும் விவரம் அறிந்ததும், அப்பர் மீண்டும் கதவைத் திறந்து, ஆண்டவனைத் தரிசிக்க தேவாரப் பாடல்களைப் பாடினார். பத்துப் பாடல்களைப் பாடியும் கதவு திறக்கவில்லை. கடைசியாகப் பதினோராவது பாடலை, அப்பர் பெருமான் மிகவும் மனம் உருகிப் பாடியதுமே, நீண்ட காலமாக மூடிய கதவு திறந்து கொண்டது!
இத்தகைய தெய்வீக மணம் கமழும் இத்திருத்தலத்தில், 1897-ஆம் ஆண்டு பிப்ரவரி25-இல், அப்பாக்குட்டிப் பிள்ளை – தங்கம்மாள் தம்பதியருக்கு, இரண்டாம் புதல்வராகப் பிறந்தவரே, வேதரத்தினம் பிள்ளை ஆவார்.
குடும்பத்தில் மிகச் செல்லமாக வளர்க்கப்பட்ட சிறுவன் வேதரத்தினம், வேதாரண்யத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி, ஐந்தாம் வகுப்பு வரை அங்கு படித்தார். பின்னர் மேற்படிப்பிற்காக, அன்றாடம் படகில் நாகைக்குச் சென்று மூன்றாண்டு காலம், தேசிய உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். படிப்பை முடித்த பின் தமது உறவினரான தெய்வநாயகம் பிள்ளையின்உப்பளத்தில் ஓர் பாகஸ்தராகச் சேர்ந்து கூட்டு வியாபாரம் கவனித்தார். மிக்க இளமையிலேயே, தன் தாய்மாமன் மகள் கமலாம்பாளைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது வேதரத்தினம் பிள்ளைக்கு வயது 18. அவரது மனைவிக்கு வயது சுமார் 13. பால்ய வயதில் திருமணம் செய்வது, அந்நாளில் ஒரு சம்பிரதாயமாகவே இருந்தது. வியாபாரத்தைக் கவனித்து வந்த வேதரத்தினம் பிள்ளையின் மனம் ஆன்மீகத்திலும், தேசியத்திலும் ஈடுபடத் தொடங்கியது. தாயுமானவர் பாடல்கள், இராமாயணம், பகவத்கீதை, திருக்குறள் இவைகளைஆழ்ந்து படித்தார். காந்தியடிகளின் நூல்களே இவரைத் தேசப்பணியில் ஈடுபடத் தூண்டியவை.
கூட்டு வியாபாரத் தொழில், காந்தி மகானின் சிந்தனைக்கு மாறாக இருப்பதை அறிந்து, வேறு உத்தியோகம் தேட சென்னைக்கு வந்தவர், இங்கு மற்றோர் கடையில் உத்தியோகத்தில் சேர்ந்தார். ஒரு சமயம் பம்பாய்க்குச் சென்றவர், அச்சமயம் மகாத்மா காந்தியடிகளின் பிரசங்கங்களைக் கேட்ட பின்னர், அவரது சுதேசி இயக்கத்தினால் உந்தப்பட்ட இளம் வாலிபரான வேதரத்தினம் பிள்ளையின் மனதிலும், சுதந்திரம், சுதேசியம் இவை இரண்டும் ஆழமாக வேரூன்றின.
மீண்டும் வேதாரண்யத்திற்கே திரும்பிய அவரது மனம், நாடு சுதந்திரம் பெற காந்திய வழியையே பெரிதும் விரும்பியது. இதனால் வேதரத்தினம் பிள்ளை ‘காந்திஜியே என் தூதுவர்! தேசமே எனது சுகமும் துக்கமுமாகும்!’ என்ற தத்துவ அடிப்படையிலேயே, வேதாரண்யத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் கொள்கைகள் பரவவும், அதனால் மக்கள் விழிப்பு அடையவும் பெரிதும் விரும்பினார்; தீவிர பிரச்சாரங்களில் இடைவிடாமல் பாடுபட்டார். வேதாரண்யத்தைத் தவிர தமிழகத்தில் பல இடங்களில் இவரது மேடைப் பிரசங்கங்கள் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து எதிர்ப்புக் குரலைத் தெரிவித்தன. இதனால், மகாத்மா காந்திஜி முதல் பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் வரையில், எல்லோரையுமே வேதரத்தினம் பிள்ளையின் தேசிய சேவைகள் கவர்ந்தன.
தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்களுடன் மிக நெருங்கிப் பழகின காரணத்தினால், தமிழ்நாட்டில் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக எடுக்கும் போராட்டங்களை வேதரத்தினம் பிள்ளையிடம் கலக்காமல் நடத்துவது கிடையாது!!
1930-ஆம் ஆண்டு, ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து உப்புச் சத்தியாகிரகம் நடத்த திட்டமிடப் பட்டது. 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி மூதறிஞர் ராஜாஜி தலைமையில், திருச்சியில் டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் இல்லத்திலிருந்து புறப்பட்ட தொண்டர் படை, 16 நாட்கள் பாத யாத்திரையாகச் சென்று, தென்னாட்டு குருக்ஷேத்திரம் என்றழைக்கும் வேதாரண்யத்திற்கு, ஏப்ரல் 28-இல் வந்தடைந்தது. இடையிடையே தஞ்சை கலெக்டர் ‘தார்ன்’ அவர்களின் இடையூறுகள் இருந்தும், அதனையெல்லாம் முறியடித்தது, புனித யாத்திரை. ஏப்ரல் 30-ஆம் தேதி வேதாரண்யத்தைச் சேர்ந்த அகஸ்தியம் பள்ளியில், மூதறிஞர் ராஜாஜி தமது தொண்டர் படையுடன் ஆங்கிலேய உப்பு வரியை எதிர்த்து உப்பை அள்ளினார்.
இந்தப் போராட்டத்தில் வேதரத்தினம் பிள்ளையின் பாதுகாப்பான ஏற்பாடுகள் மகத்தானவை. அனைவரும் மெச்சும் படியான செயல்களில் ஈடுபட்டு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை வெற்றியோடு முடித்தார். ஒரு பெரும் படைக்குத் தளபதி எப்படிச் செயல்படுவாரோ, அந்த வகையில் வேதரத்தினம் பிள்ளை வேதாரண்யத்தில் தொண்டர் படைக்கு, சிறந்த தளபதியாக முன்னின்று செயல்பட்ட காரணத்தினால், 1931-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் மாநாட்டில், வேதரத்தினம் பிள்ளைக்கு “சர்தார்” என்ற சிறப்புப் பட்டமும் அளிக்கப் பட்டது.
தேச விடுதலைச்கான போராட்டங்களில் ஈடுபட்ட சர்தார் வேதரத்தினம் பிள்ளை, நான்கு முறை சிறை தண்டனையை ஏற்றார். சிறையில் இவர், தன்னுடைய சக கைதிகளுக்கு ஆன்மீக விஷயங்களோடு, தேசியத்தைப் பற்றியும் மிக்க எளிய முறையில், பிரசங்கங்களைச் செய்ததினால், அரசியல் கைதிகளோடு சாதாரணக் கைதிகளும் நாட்டுப் பற்றில் வெகு தீவிரம் அடைந்தனர்.
“சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் மூதாதையர் தாயுமான சுவாமிகளின் வழியில் தோன்றியவர்கள் என்ற காரணத்தினால், சர்தார் வேதரத்தினம் பிள்ளையும் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சிக்காகவே, தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவரானார். 1947-ஆம் ஆண்டு தமிழக அரசாங்கத்தினால் அமைக்கப் பெற்ற தமிழ் வளர்ச்சிக் கழக நிறுவனத்திற்கு பேருதவியாக இருந்தார். இதன் பலனாக, அதே ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ் விழா, பின்னர் உலகத் தமிழ் மாநாடு அமையவும் வழிகாட்டியது.
1949-ஆம் ஆண்டு திருவாரூரில் நடந்த இரண்டாவது தமிழ் விழாவின் வரவேற்புக் குழுவிற்குத் தலைவராக இருந்து விழாவைச் சிறப்புடன் நடத்தினார். இவர் சென்னை சட்டமன்ற உறுப்பினராக 3 தடவைகள் தேர்ந்தெடுக்கப் பட்டவர். மகாத்மா காந்தியடிகளிடம் தனிப்பட்ட பற்றுக் கொண்ட சர்தார் வேதரத்தினம் பிள்ளை காந்திஜியின் ஆதாரக் கல்வித் திட்டத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு கல்வி நிலையங்களைத் தொடங்கினார். அதோடு பழம்பெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், பெரும் புரட்சியாளருமான வ.வே.சு. ஐயரின் சேரன்மாதேவியிலுள்ள பரத்வாஜர் ஆசிரமத்திற்குச் சென்று பார்வையிட்டு, அது போல, வேதாரண்யத்திலும் ஒரு குருகுலம் அமைக்க எண்ணம் கொண்டார்.
“வெள்ளையனே வெளியேறு!” போராட்டத்தில் மகாத்மா காந்திஜியும், அவரது துணைவியார் கஸ்தூரிபா காந்திஜியும் சிறையில் அடைக்கப் பட்டனர். பின்னர், 1944-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-இல் அன்னை கஸ்தூரிபா மரணம் அடைந்தார். அன்னையின் நினைவைப் போற்றும் வகையில், சர்தார் வேதரத்தினம் பிள்ளை 1946-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய கல்விக்கான நிறுவனமான “கஸ்தூரிபா காந்தி குருகுலம்” ஏற்படுத்தப் பட்டது. இந்தக் குருகுலத்திலிருந்து, “கஸ்தூரிபா ஆதாரப் பள்ளி”யும் தொடங்கப் பட்டது.
1897-ஆம் ஆண்டு, பிப்ரவரி 25-இல் பிறந்த சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறு, சுதந்திர தீபத்தின் ஒளி விளக்காக அமைந்து, நமக்கு வழிகாட்டி வருகின்றது!