பாபநாசம் வட்டம், ஆதனூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை, திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலையை எதிர்த்து 501 நாட்களாக போராடி வரும் கரும்பு விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாபநாசம், திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும் புதிய நிர்வாகம் வட்டியுடன் வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் வங்கிகளில் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்து சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும், திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2022-ம் ஆண்டு நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் அப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, 501 நாட்களாக போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இன்று இண்டியா கூட்டணி சார்பாக மயிலாடுதுறையில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஆர்.சுதா, பாபநாசம் ஒன்றியப் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாகனம் மூலமாக பாபநாசம் வட்டம், மருத்துவக்குடியில் தொடங்கிய பிரச்சாரத்தில் வேட்பாளர் ஆர்.சுதா மற்றும் திமுக ஒன்றியச் செயலாளர் தாமரைச்செல்வன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பிரச்சாரம், ஆதனூர் கிராம நிர்வாக அலுவலகம் வழியாகச் சென்று கொண்டிருந்தது.
அப்போது, காங்கிரஸ் வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார் எனத் தகவலறிந்து, 501 நாட்களாக போராடி வரும் கரும்பு விவசாயிகள் அங்கு திரண்டு வேட்பாளர் வந்த வாகனத்தை மறித்து, காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, அரசே இந்த ஆலையை ஏற்று நடத்தும் என கூறிவிட்டு, அவர்களே பினாமி பெயரில் ஆலையை விலைக்கு வாங்கி விட்டார்கள் என முழக்கமிட்டனர்.
இதையடுத்து வேட்பாளர் ஆர்.சுதா அந்த வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வந்து, “என்னை நம்புங்கள். இதற்கு முன்பு சொன்னவர்களை பற்றி எனக்குத் தெரியாது. நான் ராகுல் காந்தியிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்கிறேன். என் மேல் நம்பிக்கை இருந்தால் எனக்கு வழிவிடுங்கள்” என்று போராடி வரும் விவசாயிகளிடம் அவர் பேசிக்கொண்டிருந்த போது, கூட்டணி கட்சி நிர்வாகி ஒருவர் குறுக்கே பேசியதால் ஆத்திரமடைந்த வேட்பாளர் ஆர்.சுதா, “இங்கு யாரும் பேசக் கூடாது. யாராவது பேசினால், இங்கிருந்து வெளியே செல்லுங்கள்” என கோபத்துடன் கூறியதால் அங்கு அமைதி நிலவியது.
தொடர்ந்து, வாகனத்தில் ஏறியபோது வாகனத்தில் இருந்த திமுக நிர்வாகி ஒருவர், விவசாயிகளை பார்த்து, “இதே வேலையா உங்களுக்கு, முதலில் இங்கிருந்து செல்லுங்கள்” என விவசாயிகளை அவமானப்படுத்தும் விதமாகப் பேசியதால், அவருக்கும் கரும்பு விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், மீண்டும் வேட்பாளர் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கமிட்டனர்.