புராதனமிக்க எந்த கோவில்கள் மீதும் யாரும் கைவைக்க நீதிமன்றம் அனுமதிக்காது !

புராதனமிக்க எந்த கோவில்கள் மீதும் யாரும் கைவைக்க நீதிமன்றம் அனுமதிக்காது !

Share it if you like it

மாநில நிபுணர் குழுவின் ஒப்புதல் பெறாமல் சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரங்களை சுற்றி பூங்கா அமைக்கப்படுகிறது. அனுமதி பெறாமல் கோயிலுக்குள் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ள பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹிந்து அறநிலையத்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த விசாரணையின் போது ‘சட்ட விரோதமாக கட்டுமானம் நடக்கவில்லை; மேற்கொண்டு கட்டுமானம் செய்ய மாட்டோம். அவ்வாறு நடந்தால் உடனே பணிகள் நிறுத்தப்படும்’ என பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அதேபோல ‘அனுமதியில்லாமல் பூங்கா அமைக்கப்படுவதாக வழக்கு தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் மறைமுகமாக ஹிந்து அறநிலையத் துறை தலையிட முயற்சிக்கிறது’ என புராதன பாதுகாப்பு அமைப்பு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு சிறப்பு அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் நடராஜ தீட்சிதர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.கனகராஜ், ”கோயில் வளாகத்துக்குள் பொது தீட்சிதர்கள் கட்டுமானம் மேற்கொள்கின்றனர். கோயில் வளாகத்தில் மண் அள்ளும் இயந்திரம் நிறுத்தப்பட்டுள்ளது. புகைப்படங்களை தாக்கல் செய்கிறேன்,” என்றார்.

அப்போது பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கர், ”சிதம்பரம் நடராஜர் கோயிலில், எந்த விதிமீறலும் நடக்கவில்லை; எவ்வித சேதமும் ஏற்படுத்தவில்லை. பராமரிப்பு பணிகள் தான் நடந்தன.

”பொது தீட்சிதர் குழுவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டவர் வழக்கு தொடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்த வழக்கு உள்நோக்கமானது. குழு அமைத்து ஆய்வு செய்து கொள்ளலாம்,” என்றார்.

சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ”கட்டுமானங்கள் குறித்து தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவுப்படி குழு அமைத்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அக்குழு, எப்போது வேண்டுமானாலும் கோவிலுக்குள் சென்று ஆய்வில் ஈடுபடும். ”கட்டுமானங்களுக்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளன,” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:

திருவண்ணாமலை கோயிலுக்கு வெளியில் கட்டுமானங்கள் மேற்கொள்வதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இந்த வழக்கில் சிதம்பரம் கோயிலுக்குள் கட்டுமானம் மேற்கொள்வதாக தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

புராதனமிக்க சிதம்பரம் கோயில் உட்பட எந்த கோயில்கள் மீதும் யாரும் கைவைக்க இந்த நீதிமன்றம் அனுமதிக்காது. கோயில்கள் பக்தர்களுக்கானது. வேறு நோக்கத்தில் எவரேனும் யாரும் கைவைத்தால் அவர்களை இந்த நீதிமன்றம் தடுக்கும். எங்களை பொறுத்தவரை சிதம்பரம் கோயில் வளாகத்தில் கட்டுமான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாது என பொது தீட்சிதர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

அந்த உத்தரவாதத்தை மீறியதற்காக ஆதாரங்களை மனுதாரர் தரப்பும் அறநிலையத்துறை தரப்பும் தாக்கல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுப்போம். தேவைப்பட்டால் அதை ஆய்வு செய்ய ஒரு குழுவையும் அமைப்போம். மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பொது தீட்சிதர்கள் குழு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக சிதம்பரம் கோயிலுக்கு உலகம் முழுதும் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் கோயிலுக்கு நன்கொடை வழங்க விரும்பினால் எப்படி வழங்க வேண்டும், அதற்கு என்ன வழிமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


Share it if you like it