வீல்சேர் தராததால் தாயை சுமந்து சென்ற மகள் : அரசு மருத்துவமனையில் அவலம் !

வீல்சேர் தராததால் தாயை சுமந்து சென்ற மகள் : அரசு மருத்துவமனையில் அவலம் !

Share it if you like it

ஈரோடு பெரியவலசு பகுதியைச் சேர்ந்தவர் சொர்ணா. இவர் வேலை நிமிர்த்தமாக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் ஒன்று மோதியதில், மூதாட்டி சொர்ணத்திற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மூதாட்டி சொர்ணத்தை மீட்ட அவரது மகள் வளர்மதி, ஆட்டோ மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். அப்போது, மூதாட்டி சொர்ணத்தைக் கண்ட மருத்துவர்கள் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட பிரிவிற்கு மூதாட்டியை அழைத்துச் செல்வதற்காக வீல்சேர் அல்லது ஸ்ட்ரெச்சர் தருமாறு கேட்டபோது, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வலியால் துடித்துக் கொண்டிருந்த மூதாட்டி சொர்ணத்தை, தன்னந்தனியாக தூக்கிக்கொண்டு மகள் வளர்மதி அவசர சிகிச்சை பிரிவு இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை சுகாதார இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். அதில், “நேற்று நான் விடுமுறையில் இருந்தேன் மற்றும் மருத்துவமனையில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தவர் ஒருவரின் உறவினர்கள் அதிகமாக இருந்த சூழலில் எதிர்பாராமல் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

இது குறித்து முறையாக நாளை மறுதினம் மருத்துவமனையில் உரிய விசாரணை நடத்த உள்ளோம். அதேபோல், இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க மருத்துவமனை சூப்பிரண்டு மற்றும் ஆர்எம்ஓ ஆகிய இருவருக்கும் மெமோ வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து இருவரும் கொடுத்த விளக்கத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப உள்ளோம்” என தெரிவித்தார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *