திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியாக முப்போகம் விளையும் நிலமான 3200 ஏக்கர் பூமியை தரிசு நிலம் என தவறாக வகைப்படுத்தி நிலம் கையகப்படுத்துவதாகவும் இதற்கு 9 கிராமங்களை சேர்ந்த 300க்கு மேற்பட்ட விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு செய்யாறு சிப்காட் அலுவலகத்திற்கு மனு கொடுக்க நடைபயணமாக செல்லும்போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதில் மூன்று விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். எங்கள் நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், செய்யாறு எம்எல்.ஏ., அமைச்சரிடம் மனு கொடுத்ததும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதிகாரிகள் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் 3200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 125 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது :- எங்கள் போராட்டத்திற்கு அரசின் எந்த இயந்திரமும் செவிசாய்க்கவில்லை என்றாலும் இதுவரை 108 நபர்கள் மீது வழக்கு போட்டு உள்ளனர். அதில் பெண்களும் அடக்கம். மொத்தம் 11 வழக்குகள் இதுவரை எங்கள் மீது பதிந்து உள்ளனர். அருள் ஆறுமுகம் ஆகிய என் மீது 3 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர்.
எங்கள் விவசாய நிலங்களை எடுக்காதீர்கள். எங்கள் குடும்பமே அதை நம்பித்தான் உள்ளது என்று அரசிடம் சொன்னதுக்கு என் மீது வழக்கு. ஆனால் எங்களை ரவுடிகளை வைத்து மிரட்டிய சட்டமன்ற உறுப்பினர் மீது எந்த வழக்கும் இல்லை. இங்கு கூடி உள்ள பெரும்பாலானோர் மீது வழக்கு போட்டு உள்ளனர். நாங்கள் எங்கள் நிலங்களை மீட்க போராடுவதா? இல்லை இந்த வழக்குகளை எதிர்கொண்டு காலம் முழுவதும் சாவதா? என்று தெரியவில்லை.
எங்கள் பகுதி கவுன்சிலர் கூட எங்கள் நியாயத்தை உணராமல் உதாசீனப்படுத்தினால். இப்படி எங்கள் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், மாவட்ட ஆட்சியர், கவுன்சிலர், போலீஸ் அனைத்தும் எங்களுக்கு எதிராக செயல்படுவதால் ஊரில் போராடி ஒரு பயனும் இல்லை என்று சென்னைக்கு வந்து உள்ளோம். இங்கு பாருங்கள் அனைவரும் வயது முதிந்தவர்கள் அதிகம் வந்து உள்ளனர். இவர்கள் வாழ்க்கையை அந்த விவசாய நிலத்தை நம்பியே உள்ளது. இவர்களை ஏமாற்றி அரசு என்ன சாதிக்க போகிறது ?
இந்த நிலையில் திருவண்ணாமலையில் தன்னுடைய நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த கூடாது என்று அமைதியான வழியில் போராடிய பச்சயப்பன் என்ற விவசாயியை குண்டர் என்று அறிவித்து பாலியல் குற்றவாளி, கள்ளச்சாராய குற்றவாளி, விபச்சார தொழில் குற்றவாளி போன்றவர்களை கைது செய்யும் குண்டர் சட்டத்தில் திமுக அரசு கைது செய்துள்ளது. மொத்தம் 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.