சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவதற்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவிக்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது – வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் இயங்கிவந்த தனியார் பட்டாசு ஆலையில் கடந்த மே 9 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்த 6 பெண்கள் உட்பட 10 அப்பாவி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தற்போதுவரை அரசின் நிவாரணத் தொகை அறிவிக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்காத தமிழக அரசு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகும் உரிய நிவாரணத் தொகையை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
திமுக முப்பெரும் விழா எனும் பெயரில் தனக்குத் தானே பாராட்டு விழா நடத்தி பெருமைப்படும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, அரசின் தொடர் அலட்சியப் போக்கால் ஏற்படும் பட்டாசு விபத்துகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் அப்பாவித் தொழிலாளர்களின் ஏக்கமும், தவிப்பும் எப்போது புரியும்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரை இழந்த அப்பாவி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக அறிவிப்பதோடு, இனியாவது கூடுதல் கவனம் செலுத்தி பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.