கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம் இந்தக் கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் தொடர்புடைய ஜோசப் ராஜா என்பவரும் கைது செய்யபட்டார். புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை ஜோசப் ராஜா வாங்கி விநியோகம் செய்பவர் என போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து நீதிபதி கோகுல்தாஸ் சம்பவம் நிகழ்ந்த கருணாபுரம் பகுதிக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நீதிபதி கோகுல்தாஸ் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் மற்றும் கல்யான சுந்தரம் ஆகியோர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இதில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பெண்கள் ஒரு திருநங்கை உட்பட 59 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சிகிச்சையில் இருக்கும் 10 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 111 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 12 பேர், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 29 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் என 156 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் தொடர்பாக மேலும் ஏழு பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இதுவரையில் 21 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இவர்கள் என்ன நாட்டுக்காக போராடி குண்டடி பட்டா உயிரிழந்தனர். சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்ததற்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் எப்படி 10 லட்சம் ரூபாய் தரலாம். கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இதுபோல் இழப்பீடு தந்தால் அது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடாதா ?
இதுஒருபுரம் இருக்க நேற்று முன்தினம் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஜாகர்குண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்கர் மற்றும் தெகுலகுடேம் இடையே நக்சலைட்கள் புதைத்த ஐஇடி குண்டுவெடிப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினர் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்.விஷ்ணு (35), மற்றொரு ஜவான் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சைலேந்திர குமார் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வீரமரணமடைந்த உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சைலேந்திர குமார் அவர்களின் வீட்டிற்கு உத்தரபிரதேச அமைச்சர் ராகேஷ் சச்சன் சென்றுள்ளார்.
“முதல்வர் யோகி ஆதித்யநாத் வீர மரணமடைந்த ஜவானுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பின்னர் அவரது அறிவுறுத்தலின்படி, வீர மரணமடைந்த குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. ஜவானின் தாயாருக்கு 15 லட்சமும் அவரது மனைவிக்கு 35 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் வீர மரணமடைந்த வீரரின் பெயரில் ஒரு சாலைக்கு பெயர் சூட்டப்படுவதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டின் முதல்வரான ஸ்டாலின் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு பணத்தை அள்ளி வழங்குகிறார். உத்தரபிரதேச முதல்வர் யோகியோ நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரனின் குடும்பத்திற்கு அள்ளி வழங்குகிறார். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவரையும் சாலைக்கு பெயரை வைத்து கௌவரப்படுத்துகிறார்.
இதில் யார் மக்களுக்கான முதல்வர் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.