சேலம் மாவட்டம் உள்ள திருமலைகிரி என்கிற கிராமத்தில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயிலின் உள்ளே பட்டியலின இளைஞர் பிரவீன்குமார் என்பவர் நுழைந்ததற்காக அவரை திருமலைகிரி பஞ்சாயத்து தலைவர் டி. மாணிக்கம் ஊர் மக்கள் முன்னிலையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்து மாணிக்கத்தை தி.மு.க-வில் கட்சிப் பதவியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் தி.மு.க மேலிடம் இடைநீக்கம் செய்தது
அப்போது, பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டியதற்காக ஸ்டீல் பிளாண்ட் போலீசார் பஞ்சாயத்து தலைவர் மாணிக்கம் மீது எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
இதனிடையே, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில், மாணிக்கம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர் மீண்டும் கட்சியில் பணியாற்ற வேண்டும் என்று கூறியதையடுத்து, அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, சேலம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளராக பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார் என்று அறிவித்தார்.