ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வயிற்று வலி என்று வந்த இளம்பெண்ணை, தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு அரசு மருத்துவர் ஒருவர் கூறியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகள் சிறந்த கட்டமைப்பை கொண்டிருப்பதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில், மருத்துவரின் இந்த செயல் கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்திருக்கிறது. கீழ்முருங்கை, வடபுதுப்பட்டு தொடங்கி வாணியம்பாடி வரை உள்ள சாமானிய மக்கள் இந்த மருத்துவமனையைதான் நம்பி இருக்கின்றனர். ஆம்பூரில் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் முளைத்திருந்தாலும், அரசு மருத்துவமனைக்கு என ஒரு பாரம்பரியம் இருக்கிறது.
இந்த நம்பிக்கையில்தான் மக்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்நிலையில், இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்துக்கொண்டிருப்பது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இளம்பெண் ஒருவர் வயிற்று வலிக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் எந்த மருத்துவரும் இவரை அணுகவில்லை. மருத்துவரை சென்று அழைத்ததற்கு சிகிச்சை அளிக்க வர மறுப்பு தெரிவித்த மருத்துவர், அவ்வளவு அவசரமாக இருந்தால் தனியார் மருத்துவமனைக்கு போக வேண்டியதுதானே? என்று கூறியுள்ளார். இதன் பின்னர் இளம்பெண்ணுக்கு ஊசி போடப்பட்டிருக்கிறது. இருப்பினும் வயிறு வலி குறையாததால் மருத்துவரிடம் மேல் சிகிச்சையை அளிக்குமாறு இளம்பெண் கூறியுள்ளார். அதற்கு மருத்துவர், “ஆம்புலன்ஸை கூப்பிடுறேன். வேணும்னா அடுக்கம்பாறை ஹாஸ்பிடலுக்கு போ” என்று நக்கலாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிருப்தியடைந்த இளம்பெண் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேள்வியெழுப்ப, இந்த விவகாரம் வாக்குவாதமாக வெடித்திருக்கிறது.
இளம்பெண்ணுக்கு ஆதரவாக மற்ற நோயாளிகளும் கேள்வி எழுப்பிய நிலையில், “நீ எங்கவேனா போய் சொல்லிக்கோ. நா பயப்படமாட்டேன்” என்று ஒருமையில் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆம்பூர் மருத்துவமனை தொடர்பாக ஏற்கெனவே ஏராளமான புகார்கள் எழுந்திருக்கின்றன. ஆனால் இதில் எதுவும் தீர்க்கப்படவில்லை. குறிப்பாக போதிய மருத்துவர்கள் இல்லை, சுகாதாரமான கட்டமைப்பு கிடையாது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இப்படி இருக்கையில் மருத்துவர் ஒருவர், நோயாளிகளை ஒருமையில் பேசி, தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.