2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மாதம் 9ம் தேதி போதைப் பொருள் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன் பேரில், டெல்லியில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அமீர் நேற்று காலை ஆஜரானார். அங்கு அவரிடம் இரவு 10.30 மணி வரை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தினர்.
அமீரிடம் விசாரணை நடைபெற்றபோது, அவரது தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஜாபர் சாதிக்குடன் இருக்கும் தொடர்பு குறித்தும் அவரது பணப்பழக்கம் தொடர்பாகவும் அமீரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் இயக்குநர் அமீரின் வாக்குமூலத்தை எழுத்து பூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய உள்ள சுமார் 35 இடங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) சோதனையைத் தொடங்கியது.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும் ஹோட்டல், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது. அதேபோல், சென்னை பாண்டி பஜாரில் உள்ள இயக்குநர் அமீரின் வீடு மற்றும் அலுவலகம், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை முடிவில் போதைப் பொருள் வழக்கில் மேலும் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.