ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி ஆடுகளை மேய்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேட தொடங்கினர்.
இதனிடையே கிராமத்தில் உள்ள குளத்தில் பாதி எரிந்த நிலையில் சிறுமியின் உடல் ஆக.4ஆம் தேதி மீட்கப்பட்டது. இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் செங்கல் சூளையில் வைத்து எரிக்கப்பட்டுள்ளார். பிறகு தடயங்களை அழிப்பதற்காக சிறுமியின் உடல் குளத்தில் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கொலை வழக்கில், பெண்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட கலு மற்றும் சகோதரர் கன்ஹா ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என கடந்த மே.18ஆம் தேதி போக்சோ நீதிமன்றம் கண்டறிந்தது. பின்னர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இந்நிலையில், குற்றவாளிகள் இருவருக்கும் இன்று மரணதண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் மஹாவீர் சிங் கிஷ்னாவத் கூறுகையில், “இந்த வழக்கில் 222 ஆவண ஆதாரங்கள் அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் குற்றவாளிகள் எனக் கண்டறிந்து, இருவருக்கும் நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலையை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்” என்று கூறினார்.