விஜயதசமி மற்றும் தேசிய தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, வருகிற 22 மற்றும் 29 ஆம் தேதிகளில், தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது, அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அந்தந்த மாநகர போலீஸ் உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதற்கு அனுமதி மறுக்கப் பட்டதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, நீதிபதி ஜி .ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
தலைமை குற்றவியல் அரசு வக்கீல், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என உளவுத்துறை எச்சரித்து உள்ளதாக கூறினார். அதற்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் அவர்கள், சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசின் கடமை என்றும், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் கேட்கப்பட்ட விவரங்களை போல பிற அமைப்புகளிடம் கேட்கப்படுமா ? என கேள்வி எழுப்பினார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கும் காவல் துறையினரின் கருத்துக்களை ஏற்க முடியாது என திட்டவட்டமாக கூறிய நீதிபதி, வரும் 22 மற்றும் 29 ஆம் தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.