அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற வருமானத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் திமுகவினர் 4 பேரின் ஜாமீனை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் கடந்தாண்டு மே மாதம் 25-ல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது வருமான வரித் துறை அதிகாரிகளுக்கும், அங்கு கூடிய திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, வருமானத் துறை அதிகாரிகளை தாக்கி, வாரண்ட் நகல், அரசு முத்திரைகள், வழக்கு தொடர்பான ஆவணங்கள், பென்டிரைவ் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாக திமுகவினர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து திமுகவினர் பலரை கைது செய்தனர்.
திமுகவினருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி வருமான வரித் துறையினர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்து திமுகவினரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற திமுகவை சேர்ந்த ரீகன், ராஜா, சரவணன், ராமச்சந்திரன் ஆகியோருக்கு கரூர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் வருமானத் துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் திமுகவினர் 4 பேருக்கு கரூர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை, நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.