தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள் மற்றும் சென்னையில் அவருக்கு தொடர்புடையவர்கள் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. மேலும் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்கள் இல்லங்களிலும் இந்த ரெய்டு நடந்து வருகிறது.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வந்த புகாரின் பேரில், 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ரெய்டு குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை என்பது அதிகம் பணம் புழங்கும் துறை. இதில் நிச்சயம் ஏதாவது முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருக்கும் என்பதன் அடிப்படையில்தான் இந்த ரெய்டு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஆதாரங்களை வருமான வரித்துறையினர் ஏற்கெனவே திரட்டியிருப்பார்கள். அதேபோல திமுகவுக்கு நிதி வழங்கும் முக்கிய நிதி ஆதாரமாக எ.வ.வேலு இருக்கிறார்.
இதுபோல் கோவை திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகி மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமான துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது சகோதரர் வீட்டிலும் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.