12 வயதான லிசிபிரியா கங்குஜம் மணிப்பூரைச் சேர்ந்தவர். இவர் டைமோர் லெஸ்டே நாட்டின் சிறப்புத் தூதராக காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இன்று நடைப்பெற்று கொண்டிருந்த கூட்டத்தில் அவர் மாநாட்டு மேடையில் திடீரென ஒரு பதாகையுடன் தோன்றினார். அந்தப் பதாகையில் ”புதைபடிம எரிவாயுக்களுக்கு தடை விதியுங்கள். நம் பூமியைக் காப்பாற்றுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. அவர் அவ்வாறு பதாகையுடன் மேடையேறியதை பலரும் ஆமோதித்து வரவேற்றனர். அரங்கில் கைத்தட்டல்கள் ஓங்கி ஒலித்தன. ஆனாலும் அவருடைய நடவடிக்கை விதிகளுக்குப் புறம்பானது என்பதால் அவர் மாநாட்டில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
பின்னர் அவர் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டார். அதில் தனது குரலுக்கு ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். COP28 மாநாட்டுத் தலைவர் சைமன் ஸ்டீலுக்கும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த சமூக வலைதளப் பதிவில் அவர் சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார். அதில் அவர், ”புதைபடிம எரிவாயுக்களை எதிர்த்து நான் போராடுகிறேன். எனது அங்கீகாரத்தை எப்படி ரத்து செய்ய முடியும்? நீங்கள் உண்மையிலேயே புதைபடிம எரிவாயுக்களைக் கட்டுப்படுத்துவதில் குறியாக இருந்தால் என் மீதான தடைய நீக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். தன் மீதான நவடிக்க குழந்தைகள் உரிமை மீறலாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீதான தடை அரை மணி நேரத்தில் நீக்கப்பட்டது.