தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தொடர்பாக சமீபகாலமாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சி அளிக்கக் கூடியவையாக உள்ளன. மாணவர்கள் சாதி தங்களுக்குள் மோதிக் கொள்வது, ஆசிரியர்களை அடிக்கப் பாய்வது, வகுப்பறையில், பொதுவெளியில் கட்டுப்பாடில்லாமல் நடந்துகொள்வது என பட்டியல் நீண்ட வேளையில் சாதியப் பிரச்னைகளும் மாணவர்கள் மத்தியில் ஊடுருவியிருப்பதுதான் வேதனையின் உச்சம்.
சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருதகுளம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மதியம் இடைவேளையின்போது பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் இரு தரப்பாக ஜாதி ரீதியாக மோதிக்கொண்டதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. காயமுற்றவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன மோதல் சூழ்நிலையை மாற்றிடத் தேவையான பரிந்துரைகளை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்களின் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் கயிறு, பொட்டு வைக்க தடை விதிக்க வேண்டும் என்று ஒய்வுப்பெற்ற நீதிபதி சந்துரு குழு தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார். இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நீதிபதி சந்துரு அதிகாரபூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம். அதைவிடுத்து, சுயலாபத்துக்காக, அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு, மக்களின் வரிப்பணத்தில், திமுகவின் கொள்கைகளை, குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால், அதற்கான எதிர்ப்பும் நிச்சயம் இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் மீண்டும் திருநெல்வேலியில் சாதி மோதல் சம்பவம் அரங்கேறி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை பள்ளி கழிவறை சுவற்றில் குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்தி எழுதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில், இரு மாணவர்களுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.