திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் சந்தன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற சந்தன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினர் இடையேயும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் முடிவில் இரு தரப்பினரும் சமரசமடையாததால் கோவிலை பூட்டி சீல் வைத்தனர். இதனை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இம்மாத 1 ஆம் தேதியே கோவிலை திறக்க உத்தரவிட்டது. இருப்பினும் அதிகாரிகள் கோவிலை திறக்காமல் இருந்த நிலையில் ராதாபுரம் தாலுகாவை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறக்கப்பட்டது. கோவில் திறக்கப்பட்டதும் பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கோவிலை திறந்ததும் அங்கிருந்த மக்கள் மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க கடவுளை தரிசனம் செய்தனர். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.