ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலையில் உள்ள மல்லியம்மன் துர்கம் பழங்குடி கிராம மக்கள், மின் இணைப்பு இல்லாததால், அரை நூற்றாண்டாக இருளில் வாழும் சூழல் தொடர்கிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் கடம்பூர் மலையில், அடர்ந்த வனப்பகுதியில் மல்லியம்மன் துர்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு வாகனங்கள் செல்ல முறையான சாலை வசதி இல்லை. கடம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கிமீ தூரத்தில் இந்த கிராமத்திற்கு, மிகவும் கரடுமுரடான பாதையில் பயணித்து, செங்குத்தான சரிவுகளைக் கடந்து 2 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.
இதற்கென இயக்கப்படும் சுமை வாகனத்திற்கு கட்டணம் அதிகம். 20 முதல் 30 பேர் வரை சேர்ந்து வாரத்தில் ஒருநாள் கடம்பூர் வந்து செல்ல, ரூ.3,000 வரை கொடுக்க வேண்டியுள்ளது. அவசர தேவைகளுக்கு சிலர் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால், சரிவான பாதையில் இருசக்கர வாகனத்தில் சாகசப் பயணம் மேற்கொள்வது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.
மல்லியம்மன் துர்கம் கிராமத்தில், 2011-ம் ஆண்டு 150 குடும்பங்களைச் சேர்ந்த 650 பேர் குடியிருந்தனர். போக்குவரத்து வசதி, மின்சாரம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் பலரும் இடம் பெயர்ந்த நிலையில், தற்போது 80 குடும்பத்தினர் மட்டும் குடியிருந்து வருகின்றனர். கோயில் திருவிழா உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மட்டுமே, இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த கிராமத்திற்கு வந்து செல்கின்றனர்.