பெண் போலீசாரை அவதூறாகப் பேசியது, ஹோட்டல் அறையில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் முதலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரியுள்ள நிலையில் அந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக சவுக்கு சங்கர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். அந்தவகையில் ஊட்டியில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் நேற்று ஆஜர் படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து , போலீசார் சவுக்கு சங்கரை நீலகிரியில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துக்கொண்டு சென்றனர்.
செல்லும் வழியில் திடீரென சவுக்கு சங்கர் தனக்கு வயிறு வலிப்பதாக கூறிய நிலையில் போலீசார் அவரை சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அங்கிருந்து வேன் மூலம் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சவுக்கு சங்கர். அப்போது சவுக்கு சங்கர் வேனில் இருந்தபடியே, செய்தியாளர்களைப் பார்த்து, “என் கைதுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் காரணம், அவரது தூண்டுதலின் பேரில் தான் என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்குகள் போட்டு கைது செய்து வருகின்றனர்” என கூறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சமூக வலைதளங்களில் பிரபலமானவராக அறியப்படும் சவுக்கு சங்கர் பேசிய சில வீடியோக்களில் , அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும், நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்தும் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.