சத்தியமங்கலம் அடுத்த புதுப்பீர்கடவு கிராமத்தைச் சேர்ந்தவர் பல்லவி. நிறைமாத கர்ப்பிணியான பல்லவி கடந்த நவம்பர் 29ம் தேதி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைதொடர்ந்து டிசம்பர் 1ம் தேதியன்று இரவு பல்லவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் பல்லவியோ, சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற விரும்பியதாகவும், ஆனால் மருத்துவர்கள் வற்புறுத்தியதால் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டதாகவும், அப்போது தன்னை அவமரியாதையாகவும், ஆபாசமாகவும் மருத்துவர்கள் திட்டியதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும், பிரசவ வலியை விட, ஊழியர்கள் திட்டியதுதான் தனக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார் பல்லவி.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது :- “பிரவச வார்டில் இருந்து பொது வார்டுக்கு மாற்ற ரூ.500 பணம் கேட்டார்கள். பொதுசேவை என்று கூறிவிட்டு பணம் கேட்பது நியாயமா? உங்களால் சிகிச்சை அளிக்க முடியாது என்றால் நாங்கள் வேறு மருத்துவமனைக்குச் செல்வோமே. எதற்கு எங்களை அவமதிக்க வேண்டும்?” என்று வேதனையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, ஆய்வுக்கு வந்த ஈரோடு மாவட்ட இணை இயக்குநர் அம்பிகா சண்முகத்திடமும் புகார் தெரிவித்த நிலையில், புகார் குறித்து தலைமை மருத்துவர் தங்க சித்ராவிடம், இணை இயக்குநர் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, மருத்துமனைக்கு வரும் நோயாளிகளிடம் பணிவாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், தகாத வார்த்தைகளில் பேசிய மருத்துவ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிய அவர், “பிரவச நேரம் நெருங்கியதால் மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்ற அறுவை சிகிச்சை நடத்தியிருக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார். மேலும், மருத்துவ ஊழியர்களின் செயலுக்கு அப்பெண்ணிடம் மாவட்ட மருத்துவதுணை இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் வருத்தம் தெரிவித்தார்.