சீனாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே அமைந்துள்ள ஓர் சிறிய நாடு தான் மங்கோலியா. மங்கோலியா தலைநகரான உலான்பாட்டாரில் உநொமின் செட்செக் தஷ்னியம் என்கிற பெண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் தமிழகத்தில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை புத்தகத்தை படித்து பரவசப்பட்டுள்ளார். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற பொன்மொழிக்கேற்ப மணிமேகலை காப்பியத்தை மங்கோலியா மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். இதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசின் தமிழுக்கான செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் செய்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவர் தஷ்னியம் கூறியதாவது : மணிமேகலை புத்தகத்தில் பௌத்த மத கருத்துக்கள் அதிகம் நிறைந்திருந்தது. இந்த கருத்துக்கள் எங்கள் நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற முனைப்பில் இந்த நூலை எங்கள் நாட்டு மொழியில் மொழிபெயர்க்க மத்திய அரசின் தமிழுக்கான செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் மொழி பெயர்ப்புப் பணிகளை 2020ல் தொடங்கி 3 ஆண்டுகளில் 414 பக்கங்கள் கொண்ட இந்நுாலை எழுதி முடித்தேன். தற்போது பல ஆயிரம் பிரதிகள் வெளியாகியுள்ளன.
மங்கோலிய மண்ணுக்கு சொந்தமான பவுத்த கொள்கைகளை தமிழ் மண்ணில் இருந்து கொண்டு வந்துள்ள பெருமை எனக்கு மனம் நிறைவைத் தந்துள்ளது. ஆங்கிலத்தில் கேட்டு மங்கோலிய மொழியில் எழுதியபோது தான் தமிழின் பெருமை, மொழியின் செழுமையை என்னால் உணர முடிந்தது. தமிழின் சுவை, வார்த்தை அமைப்புகள் ஆச்சரியமூட்டியது. இவ்வாறு அவர் கூறினார்.
மணிமேகலை பற்றி சில :-
இரட்டைக் காப்பியம் என்று அழைக்கப்பட்ட சிலப்பதிகாரத்தின் மற்றொரு அங்கமான மணிமேகலை மிகவும் சிறப்பான காப்பியம் என்று கூறலாம். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இதனை சீத்தலைச் சாத்தனார் இயற்றி இருக்கிறார்.
இதனை இரட்டைக்காப்பியம் என அழைக்க காரணம் சிலப்பதிகாரம் இல்லறத்தையும், மணிமேகலை துறவறத்தையும் விளக்குவதால் தான். இந்த காப்பியத்தில் காப்பிய தலைவி மணிமேகலை பற்றிய அபரிமிதமான தகவல்கள் உள்ளதால் தான் இந்நூலானது மணிமேகலை என்று அழைக்கப்பட்டது.
இந்த காப்பியத்தில் கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகியவற்றை மிக முக்கியமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அனைத்து உயிர்களிடமும் அன்போடு நடக்க வேண்டும் என்ற உண்மை கோட்பாடு உணரும்படி சொல்லப்பட்டுள்ளது.
தமிழில் தோன்றிய நூல்களிலேயே முதல் சமணக் காப்பியம் என்று இந்த மணிமேகலையை கூறலாம். மேலும் இந்நூலில் பௌத்த மத நீதிகள் அதிக அளவு கொட்டி கிடைக்கிறது.மணிமேகலை என்ற இந்த காப்பியத்திற்கு வேறு சில பெயர்களும் உள்ளது. அவை மணிமேகலை துறவு, முதல் சமய காப்பியம், அற காப்பியம், சீர்திருத்த காப்பியம், புரட்சி காப்பியம், பசிப்பிணி மருத்துவ காப்பியம், பசு போற்றும் காப்பியம், துறவு காப்பியம் என்பதாகும்.