சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “எல்லோருடைய வாழ்விலும் ஓய்வு என்பது கண்டிப்பாக உண்டு. இங்கு தலைமை நீதிபதியாக இருக்கும் கங்காபுர்வாலாவுக்கு நடைபெறும் பாராட்டு விழாவாக இதைப் பார்க்கிறேன். மேலும், நீதித்துறையைப் பொறுத்தவரை, குற்ற வழக்குகள் குறையப்பட வேண்டும், உரிமையியல் வழக்குகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
நீதித்துறை என்பது வழக்கறிஞர்கள் மட்டுமல்ல நீதிமன்ற ஊழியர்களும், பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நீதிமன்றப் பணிகள் செம்மையாக நடைபெற வழி வகுக்கும். இதற்கு வழிவகை செய்த தலைமை நீதிபதி, தமிழக அரசு உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
நீதி என்றாலே தமிழ் தான், தமிழ் என்றால் நீதி. மேலும், வள்ளுவன் சீர்தூக்கி என்ற குறளை மேற்கோள் காட்டி பேசினார். மேலும், தமிழில் இல்லாத நீதி நூல்களே கிடையாது. தற்போதைய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள். அதேபோல புதிதாக பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் பதவியேற்க உள்ளார். அவரும் இதைவிட சிறப்பாக பணியாற்றுவார் என்று நம்புகிறேன்.
நீதித்துறை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும். மாவட்ட நீதிமன்ற பணியாளர்களுக்கான தலைமை நீதிபதி நிவாரண நிதி மூலம் 21,000 பேர் பயன்பெறுவார்கள் என்று நிகழ்ச்சியில் நீதிபதி கிருஷ்ணகுமார் குறிப்பிட்டதாக உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் எடுத்துரைத்தார்.