டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை, வெளத்தால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிச் சென்ற புயல் எதிர்பாராதவிதமாக வழக்கத்தை விட மிக மெதுவாக சென்றது. எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.
இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்குள் நீர் புகுந்தது. இதனால் பொருள்கள் நீரில் மூழ்கி நாசமாகின.இந்த பேரிடரிலிருந்து மீள்வதற்கு முன்பாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதற்காக மத்திய அரசு தமிழக அரசுக்கு 1000 கோடி வழங்கியது.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு ரூ.8,000 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் அதில் முதற்கட்டமாக ரூ.3,000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. தமிழ்நாடு அரசே இதனை பார்த்துக் கொள்ளும். இது நிர்வாகம் சம்பந்தப்பட்டது என்பதால், பிரச்சனை இருந்தால் தமிழ்நாடு அரசே முறையிடுவார்கள் என்று மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.