தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனங்களால் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.1 லட்சத்தில் இருந்துரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தால், மாணவிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகளில் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரைமட்டுமே கல்விக் கடன் வழங்கஅனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், அரசின் பல்வேறு திட்டங்கள் காரணமாக, மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்வியில் சேர்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு,கூட்டுறவு துறை மூலம் வழங்கப்படும் கடன் தொகையின் அளவை தமிழக அரசு ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு துறைஅமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புத்தகம், விடுதி, உணவு, பயிற்சி உள்ளிட்ட வகைகளில் கல்வி கட்டணங்களை செலுத்த ஏதுவாக மாணவர்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்பட்டு வந்தது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, தற்போது இந்த கல்விக் கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவரு அவர் கூறினார்.