கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கருமால்லூறில் வசித்து வருகிறார் அபீஸ் முகமது. இவர் கொச்சியில் உள்ள வல்லார்பாடம் கொள்கலன் மாற்று முனையத்தில் பொறியாளராக உள்ளார். இவரின் மகளான 14 வயது சிறுமி, தான் படிக்கும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் பிற மதத்தைச் சேர்ந்த மாணவனை காதலித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி இச்சிறுமி தன் காதலுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.. இதை பார்த்த அபீஸ் முகமது ஆத்திரமடைந்து தன் மகள் என்றும் பாராமல் இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார். அதன்பின் பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்து கொலை செய்ய பார்த்துள்ளார். உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அந்த சிறுமியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார் அச்சிறுமியின் தாய். ஆனால் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்று அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் போலீசார் குற்றவாளியான அபீஸ் மீது ஐபிசியின் பிரிவுகள் 342 (தவறான சிறைவாசம்), 324 (ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி காயப்படுத்துதல்), 326-A (கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்), மற்றும் 307 (கொலை முயற்சி) மற்றும் பிரிவு 75 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக களமசேரி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்படும் என்று கேரள போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.