மோடியின்  ராஜதந்திரம் – ஐக்கிய நாடு மனித உரிமைகள் சபையில், இலங்கைக்கு எதிராக மார்ச் 2021 அன்று…

0
1309

மோடியின்  ராஜதந்திரம்

ஐக்கிய நாடு மனித உரிமைகள் சபையில், இலங்கைக்கு எதிராக மார்ச் 2021 அன்று, தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஏன் இந்த தீர்மானம்?

2009 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான ஈழத் தமிழர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில்,   இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்தியா சார்பாக கலந்து கொண்டு பேசிய பிரதிநிதி கூறுகையில், “மனித உரிமைகளை காப்பதில், சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகளுக்கு பொறுப்பு இருப்பதாகவும், அண்டை நாடு என்ற அடிப்படையில், போருக்குப் பின்னர், மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளை, இந்தியா தொடர்ந்து செய்து வருவதாகவும், 13வது அரசியல் அமைப்பு சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், இலங்கையில் உள்ள அனைத்து மாகாண சபைகளுக்கும், தேர்தல் நடத்தப்பட வேண்டும்”, எனவும் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு முன்னர், 2014 ஆம் ஆண்டு நடந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் போதும், வாக்கெடுப்பில் இந்தியா, கலந்து கொள்ளவில்லை.

தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த நாடுகள்:

அர்ஜென்டினா, அர்மெனியா, ஆஸ்திரியா, பஹாமாஸ், பிரேசில், பல்கேரியா, கோட்டீஐவரி, செக் குடியரசு, டென்மார்க், ஃபிஜி,  பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மாலவி, மார்ஷல் தீவுகள், மெக்சிகோ, நெதர்லாந்து போலந்து, கொரியா, உக்ரைன், இங்கிலாந்து, உருகுவே, என மொத்தம் 22 நாடுகள் ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தன.

தீர்மானத்திற்கு எதிராக வாக்கு அளித்த நாடுகள்:

தீர்மானத்திற்கு எதிராக 11 நாடுகள் வாக்களித்து இருந்தன. அவை வங்காளதேசம், பொலிவியா, சீனா, கியூபா, எரிட்ரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சோமாலியா, உஸ்பெகிஸ்தான், வெனிசூலா.

நடுநிலை வகித்த நாடுகள்:

பக்ரைன், பர்கினோ பாசோ, கேமரூன், கேபான், இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், லிபியா, மரிட்டானியா, நமீபியா, நேபாளம், சினேகல், சூடான், டோகோ என மொத்தம் 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த கால திமுககாங்கிரஸ் கூட்டணி நிகழ்வுகள்:

2009 ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழர்கள், கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட போது, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியும், தமிழகத்தில் திமுகவும் கைகோர்த்துக் கொண்டு இருந்தது, நாம் என்றென்றும் மறக்க முடியாத சம்பவம்.

2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி  T.R. பாலு தலைமையிலான திமுக, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை சென்று, அதிபர் ராஜபக்சேயை சந்தித்தனர். 80 ஆயிரம் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர்.

திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, 2004 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை, தொடர்ந்து 9 ஆண்டு காலத்திற்கும் மேலாக, மத்தியில் ஆட்சியில் இருந்தது. மத்திய அமைச்சரவையில் திமுகவும் அங்கம் வகித்தது. அப்போது, தமிழர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்பதே வரலாற்று உண்மை, என ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம், திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் பரிசு வாங்கியது, அன்றைய பத்திரிகைகளில் பரபரப்பான செய்தியாகவும், அனைவரும் பேசும் பொருளாகவும் இருந்தது.

2013 ஆம் ஆண்டு, மார்ச் 19 ஆம் தேதி, திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியது. அப்போது தலைவராக இருந்த கலைஞர் அவர்கள் கூறிய வார்த்தை, மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் கூறியதாவது, “தொடர்ந்து காங்கிரசுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடித்து இருந்தால், அது இலங்கைத் தமிழர்களுக்கு செய்யப்படும் அநீதி எனவும், மேலும், காங்கிரசுடன் சேர்ந்து ஐ. மு. கூட்டணியில் இருந்தால், கூடா நட்பு கேடாய் முடியும்” எனவும் கலைஞர் அவர்கள் கருத்து தெரிவித்து இருந்தார்.

பின்னர், காங்கிரஸ் கூட்டணியில் திமுக ஐக்கியமானது, நாம் அனைவரும் அறிந்ததே.

2018 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி, தந்தி டிவிக்கு ராஜபக்சே அளித்த பேட்டியில், “ஈழத் தமிழர்களையும், விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களையும் எதிர்த்து போரிட, இந்திய அரசு செய்த உதவிகள் என்றும் பாராட்டுக்கு உரியது என்றும், எங்களுக்கு எதிராக இந்தியா இருந்து இருந்தால், விடுதலைப் புலிகளை முடித்துக் கட்டியிருக்க முடியாது”, எனவும் கூறி இருந்தார்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும், சமாதான பேச்சுவார்த்தை நடத்த, நார்வே அரசு பெரிதும் முயற்சி செய்தது. அந்தப் பேச்சு வார்த்தையை முன் நின்று நடத்தியது நார்வே வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த எரிக்சோல்கைன்.

2020 ஆம் ஆண்டு, செப்டம்பர் 2 ஆம் தேதி, இலங்கையில் இருந்து வெளிவரும் “டெய்லி மிரர்” என்ற இணையதள பத்திரிகைக்கு, எரிக்சோல்கைன் அளித்த பேட்டியில், “2008 ஆம் ஆண்டு, செப்டம்பரில் இருந்தே, இந்தியா, இலங்கையில் ராணுவ ரீதியான தீர்வாக இருக்க வேண்டும் என நினைத்தது. இறுதிக் கட்ட போரின் போது,  இலங்கை அரசிற்கு, இந்தியா அரசு ராணுவ ரீதியாகவும், இன்னும் மற்ற பல வகைகளிலும் உதவி செய்தது என்பதே உண்மை”, எனகருத்து தெரிவித்து இருந்தார்.

மோடியின் ஆட்சியில்:

இந்திய பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற உடன், தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், அதுவும் குறிப்பாக இலங்கையில் வாழும் தமிழர்கள் மீதும், மிகுந்த அன்பு கொண்டு இருந்தார். அதன் விளைவாக, இலங்கையில் உள்ள தமிழ் குடும்பங்களுக்கு, வீடு கட்டும் பணியை, செவ்வனே செய்ய, இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.

2015 ஆம் ஆண்டு, மார்ச் 15 ஆம் தேதி, ஜாப்னாவிற்கு விஜயம் செய்து, இலங்கையில் வாழும் 27 ஆயிரம் தமிழர்களுக்கு வீட்டை அளித்து, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார், இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

திமுக – காங்கிரஸ் ஆட்சியில் தினமும் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப் பட்டும், கைது செய்யப் பட்டும் இருந்த நிலை மாறி, தற்போது, மோடி ஆட்சியில், தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்கும் சூழல் ஏற்படுத்தப் பட்டு உள்ளது.

மீனவர் நலனில் அக்கறை கொண்டு, 2019 ஆம் ஆண்டு, புதிய துறையாக, “மீன்வளத் துறை” உருவாக்கப் பட்டு, மீனவர்களின் நலன்களை, மத்திய பாஜகவின் மோடி அரசு, பேணி காத்து வருகின்றது.

திமுக – காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்கும் முயற்சிகளில், தற்போதைய மோடி அரசு ஈடுபட்டுக் கொண்டு வருவதாக, சமூக வலைத் தளங்களில் செய்திகள் உலா வருகின்றன.

சுற்றி நெருப்பு எரியும் போது நாம் கற்பூரமாக இருக்கலாமா?!

சீனா எப்போதும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடே  கொண்டு இருக்கும். உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் “கொரோனா” என்ற கொடிய வைரஸை பரப்பி, உலகம் முழுவதும் வாழும் மக்களை அச்சுறுத்தி, உயிர் பயத்தை, சீனா ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றது.

மறு பக்கம், இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து, நமது ராணுவ வீரர்களுடன் போரிட்டு, உயிரை இழந்து கொண்டு இருக்கும் பாகிஸ்தான் என இரு பக்கமும் இந்தியாவிற்கு எதிரான நிலைப் பாட்டை கொண்ட நாடுகள், எல்லை ஓரத்தில் அமைந்து உள்ளது.

தெற்குப் பகுதியில், இந்து மகா (Indian Ocean) சமுத்திரத்தில் இருந்து இந்தியாவை, நமது எதிரி நாடுகள், தாக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், இலங்கை மண்ணை, ஓரு ஆயுதமாக, மற்ற நாடுகள் பயன் படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது.

அப்படிப் பட்ட எதிர் பாராத சூழலில், இலங்கையை நாம் பகைத்துக் கொண்டால், நமது எதிரி நாடுகளுக்கு, இலங்கை அரசு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கலாம். அதன் மூலம், நமது நாட்டை, நமது எதிரி நாடுகள் தாக்கும் முயற்சிகளுக்கு, இலங்கை மண்ணில் இருந்து மேற்கொள்ள, இலங்கை அரசு அனுமதி அனுமதித்தால், அது இந்தியாவுக்கு பேராபத்தாக அமைந்து விடும்.

அது மட்டுமின்றி, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு, மத்திய அரசு செய்து வரும் உதவிகளையும், இலங்கை அரசு தடுக்கும் முயற்சியில் ஈடுபடலாம். அதனால் நமது இலங்கை தமிழர்களின் நலன் பாதிக்கப் படலாம். மேலும், இந்தியாவின் மீது உள்ள கோபத்தில், தமிழர்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தலோ அல்லது அசம்பாவிதமோ ஏற்படுத்தக் கூடிய சூழலும் ஏற்படலாம்.

இன்று விமர்சிக்கும் கட்சிகள் அன்று செய்தது என்ன?!

போரை நிறுத்த எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், நம்முடைய தொப்புள் கொடி உறவுகள் இலங்கையில் கொத்துக் கொத்தாக, கொன்று குவிக்கப்பட்ட போது, இன அழிப்பைத் தடுக்க, எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல், இன்று தேர்தல் ஆதாயத்துக்காக தங்களுடைய சுய லாபத்திற்காக மத்திய அரசை கேள்வி கேட்கிறார்கள்.

அன்று, அவர்கள் தமிழர்கள் நலனில் அக்கறைக் கொண்டு செய்யாததை, இன்று, மத்திய  பாஜகவின் மோடி அரசு செய்து கொண்டு இருக்கின்றது என்ற காழ்ப்புணர்ச்சியே இதற்குக் காரணம் என்பது நமக்கு கண்கூடாக தெரிகின்றது.

2004 முதல் 2013 வரை தொடர்ந்து, ஒன்பது வருடங்களுக்கு மேலாக, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக, தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு, ஏன் இரட்டைக் குடியுரிமை பெற்றுத் தரவில்லை?

தமிழர்கள் நலனில் அக்கறை கொள்ளாமல், தங்களுடைய சுய லாபத்திற்காக பதவியைப் பெற்றுக் கொண்டு, தற்போது மீண்டும் பதவியைப் பெற வேண்டி, தமிழர் மேல் அன்பு இருப்பதாக காட்டிக் கொள்ளத் துடிக்கும் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டிய தருணம் இது…

இலங்கை தமிழர்களின் நலன் வேண்டி கட்சி நடத்துகிறோம் என கூறிக் கொள்ளும் மே17 இயக்கம், தமிழர் வாழ்வுரிமை கட்சி,  திமுக போன்ற கட்சிகள் இன்று காங்கிரசோடு கைகோர்த்து இருப்பதை, தமிழக மக்கள் அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டிய தருணம் இது…

தமிழக நலனில், உண்மையிலேயே அக்கறை கொண்டு செயல்படும், மத்திய பாஜக மோடி அரசை, பாராட்ட வேண்டிய தருணம் இது…

  • .ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here