தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழ்நாட்டின் தொடக்கக் கல்வியை பாதுகாக்க 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ (DPI) வளாகத்தை முற்றுகையிட்டு கடந்த 2 நாட்களாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக பேருந்துகளில் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், போராட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டனர். அப்போது தீயணைப்பு நிலையம் அருகே பேருந்தை வழிமறித்து போலீசார் சென்னை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து பேருந்தைவிட்டு இறங்கிய 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சாலையோரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நம்பிக்கை வார்த்தை மட்டுமே கிடைக்கிறது: இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, “தேர்தலில் வெற்றி பெற்று வந்தவுடன் ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றுவதாக தற்போதைய திமுக அரசு அறிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்த ஓராண்டு ஆகிய பின்பும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என்று காத்திருந்தோம். ஆனால், முதலமைச்சரை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்கிறோம் எனக் கூறினார்கள்.
அதற்கு நாங்கள் நம்பிக்கை மாநாட்டை நடத்தினோம். அதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். தற்போது அந்த மாநாட்டால் எந்தவொரு பயனும் இல்லை. தற்போது வரை “செய்வோம்.. செய்வோம்” என்று ஏமாற்றி நான்காம் ஆண்டில் வந்து நிற்கிறோம்.
அரசுக்கு எதிரான மனநிலையில் தான் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளார்கள். எனவே எங்களது கோரிக்கையை முதலமைச்சர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அனைவருமே கைதாகுவதற்கு தயாராக இருக்கிறோம். எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேறாத பட்சத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டம் மாநில பொதுக்குழு கூட்டி முடிவு செய்து அறிவிக்கும். பதவி உயர்வு இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. 5,000 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 5,000 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை எப்போது நிரப்புவார்கள் என்று தெரியவில்லை.
இவ்வளவு நம்பிக்கை மோசடியாக இந்த அரசாங்கம் செயல்பட்டால் நிச்சயமாக வரும் காலங்களில் அரசுக்கு எதிராகத்தான் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்கு இருக்கும். ஏற்கனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையால் ஒவ்வொரு தேர்தலிலும் 90% வாக்குகள் விழும். ஆனால் கடந்த தேர்தலில் 50 சதவீதத்தைவிட குறைந்துவிட்டது. ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றபடாவிட்டால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அரசுக்கு எதிராகத்தான் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகள் இருக்கும்” என்று ராமமூர்த்தி கூறினார்.