சென்னை வியாசர்பாடியில் தேமுதிக சார்பில் முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைப் பொதுச்செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாள்ர்களிடம் பேசிய பிரேமலதா, எல்லோரும் முதியோர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான் கிறிஸ்துமஸ் பண்டிகை சொல்லும் செய்தி என்றார். இன்றைய இளைய தலைமுறை தான் நாளைய முதிய தலைமுறை என்பதை நினைவில் கொண்டு உறவுகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சமீபமாக வெள்ள நிவாரணம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்குள் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், அதுதொடர்பான கேள்விக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது அநாகரீகமாக எனக்கு தெரியவில்லை என்று பிரேமலதா கருத்து தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் இன்றைக்கு அமைச்சர் பொறுப்பில் இருப்பதை உணர்ந்து, ஒரு வார்த்தையை பேசுவதற்கு முன் யோசிக்க வேண்டும் என்றார். வாயை விட்டு வார்த்தை வந்துவிட்டால் அது நமக்கு எஜமான் ஆகிவிடும் என்பதை அவர் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று கூறி, உதயநிதி வயதிற்கு அவர் பயன்படுத்தும் வார்த்தை கண்டிக்கும் நிலையில் தான் இருப்பதாக கூறினார். தமிழ்நாட்டில் கலைஞர் பெயரில் தான் அனைத்து காரியங்களும் நடைபெற்றாலும், மக்கள் வரிப்பணம் என்பதை நினைவில் கொண்டு, பொறுப்பில்லாமல் பேசக்கூடாது என்று தெரிவித்தார்.
மேலும் மழை வெள்ளத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்ய வேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தினார்.