அறிமுகம் :-
நாரத என்ற வார்த்தையில் நார என்றால் ‘தண்ணீர்’ என்றும் ‘அஞ்ஞானம்’ என்றும் இரு பொருள் உண்டு. த என்றால் ‘தருவது’ அல்லது ‘நீக்குதல்’ என்று பொருள். அதாவது, “யவர் ஒருவர் முன்னோர்களுக்கு தண்ணீர் கொடுத்து தர்ப்பணம் செய்கிறாரோ” அவரே நாரதர் என்று பொருள். இன்னொருவிதமாக நாரதர் என்றால், ” அறியாமை இருள் நீக்கி ஞான ஒளியை கொடுப்பவர்” என்றும் பொருள்படும்.
மகரிஷி நாரதர் மிகச்சிறந்த செய்தியாளராக கருதப்படுகிறார். பண்டைக்காலத்தில் முக்கியச் செய்திகள் ஒற்றர்கள் மூலம் பெறப்பட்டன. ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் இப்படிப் பல செய்தியாளர்களின் பெயர்களை பார்க்கமுடிகிறது. ராமாயணத்தில் வரும் சுமுகன் என்ற ஒற்றன் மாறுவேடமிட்டு செய்தி சேகரித்து ஸ்ரீராமனிடம் கொடுப்பதைப் பார்க்கிறோம். மஹாபாரத காலத்தில் செய்தி சேகரிப்பதற்க்கென்றே தனியாக ஒரு குழு இருந்ததை அறியமுடிகிறது. இவர்களே செய்திகளை சேகரித்தது அரசனிடம் சேர்த்தனர் அதேசமயத்தில் இவர்களே செய்திகளை பல்வேறு இடங்களுக்கும் கொண்டுசேர்த்தனர். மகாபாரதத்தின் சஞ்சயன் உலகின் முதல் வர்ணனையாளன் என்று அறிகிறோம். இவரே குருக்ஷேத்திரப் போரை பார்வையில்லாத திருதிராஷ்ட்ர மன்னனுக்கு தன் வர்ணனை மூலம் சொன்னார். பண்டைக்கால ஆய்வுகளில் பாட் மற்றும் தூத் இன மக்கள் செய்தி சேகரிப்பாளர்களாக இருந்தது தெரியவருகிறது. இவர்கள் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டார்கள் என்றும் அறிகிறோம்.
மகரிஷி நாரதர் என்னும் செய்தியாளர் :-
ஆதி பத்திரிக்கையாளர் நாரதர் ஏன் இன்றைய பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த உதாரணம் என்பது பற்றி அலசுவது மிக அவசியம். அவர் மாயை என்றால் என்ன என்பது பற்றி அறிய ஒருமுறை ஒரு பெண்ணாக மாறினார். இது அவர் ஒரு தலைசிறந்த பத்திரிக்கையாளர் என்பதற்கான உதாரணம். இதுபோன்று இறப்பு பற்றியும் எழுதியுள்ளார். கலியுகத்தில் பக்தி விருத்திக்காக எழுதப்பட்ட ஒரு அறிய நூல் பக்தி சூத்திரம். அதேபோல் கலியுகத்தில் பக்தி சிரத்தையையும், நன்னடத்தையையும் பேணுவதற்காக படைக்கப்பட்டது ஸ்ரீ சத்தியநாராயண கதை. மகாபாரதத்தின் முடிவில் தன்னுடைய மன அமைதிக்காக ஸ்ரீ கிருஷ்ண பகவானை போற்றி மகரிஷி வேதவியாசர், ஸ்ரீமத் பாகவதத்தை படைத்தார். இந்தசமயத்தில் நாரதர் இந்திரப்பிரஸ்தம் மற்றும் குருக்ஷேத்ரம் ஆகிய இடங்களின் பெயர்க்காரணம் மற்றும் வரலாற்றைப்பற்றி வர்ணித்துள்ளார்.
நாரதர் சிருஷ்டியின் தொடக்கத்திலேயே பத்திரிக்கைத்துறைக்கான வடிவத்தையும் அதன் லட்சியங்களையும் வகுத்தார். பெரும் பேரிடர்களிலிருந்து மனிதகுலத்தைக் காக்க ஆதி பத்திரிக்கையாளர் நாரதரின் பங்களிப்பை நாம் என்றும் மறக்கமுடியாது. ஒரு முறை அர்ஜுனன் தன் திவ்விய அஸ்திரங்களை சோதிக்க முற்பட்டான். திவ்விய அஸ்திரங்கள் சோதனைசெய்யவோ, காரணமில்லாமல் பிரயோகம் செய்யவோ கூடாதென்றும் அவற்றை அசுர சக்திகளிடமிருந்து மனிதகுலத்தைக் காப்பதற்கு மட்டுமே உபயோகிக்கவேண்டும் என்று அறிவுரை செய்து அர்ஜுனனை நெறிப்படுத்தினார் நாரதர். இப்படி ஒரு செய்தியாளரின் பணியை செவ்வனே செய்தார் நாரதர்.
மகரிஷி நாரதருக்கும் இன்றைய உலகத்திற்குமான தொடர்பு :-
சமூக ஊடகங்களின் வருகை நாரத பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை இன்னும் உயர்த்தியுள்ளது. எந்த ஒரு புதிய முயற்சியும் படிப்படியாக வளர்ந்து முதிரும் பொழுது அதன் குறிக்கோள்களும் லட்சியங்களும் ஓர்நிலைப்பாட்டுக்கு வருகின்றன. காலப்போக்கில் இந்த லட்சியங்கள் பின்வரும் சந்ததியினருக்கு ஒரு உதாரணமாகவும் அவர்கள் அடையவேண்டிய இலக்காகவும் மாறுகின்றன. எவன் ஒருவன் தனக்கு முந்தைய தலைமுறை விட்டுச்சென்ற இலக்குகளைக் கடக்க முழுமுயற்சி செய்கிறானோ அவன் எல்லோராலும் பாராட்டப்படுகிறான். இப்படி நமக்கு முன்வந்தவர்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு அவர்கள் விட்டுச்சென்ற படிப்பினைகளை பின்பற்ற முயற்சியாவது செய்யவேண்டும். எவ்வளவு பின்பற்றுகிறோம் அல்லது பின்பற்றவில்லை என்பது ஒருபுறமிருக்க, நம் முன் பெரியவர்கள் பலர் விட்டுச்சென்ற பாடம் இருக்கிறது என்பதே நமக்கொரு உந்துதலாக அமையும். உதாரணத்திற்கு, ஒரு ஆதர்ச அரசியல்வாதி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நாம் சர்தார் படேல் அவர்களையும், லால் பகதூர் சாஸ்திரி அவர்களையும் பார்க்கிறோம். ஒரு ராஜதந்திரி எப்படி இருக்கவேண்டும் என்றால், சாணக்கியன் போல் இருக்கவேண்டும் என்று கூறுகிறோம். சிறந்த அரசு அல்லது அரசாங்கம் எப்படி இருக்கவேண்டுமென்றால், ராமராஜ்யமாக இருக்கவேண்டும் என்கிறோம். சத்தியவான் என்றால், அரிச்சந்திரன் என்ற பதில் வருகிறது. இதுபோலவே ஆதர்ச பத்திரிக்கையாளர் என்றால் நாரத மகரிஷியே நினைவுக்கு வருகிறார்.
ஒரு பத்திரிகை எப்படி இருக்கவேண்டும் என்றோ, ஒரு பத்திரிகையாளன் எப்படி இருக்கவேண்டும் என்றோ தேடினோமேயானால், அத்தேடல் மகரிஷி நாரதரில் வந்து முடியும். செய்தி சேகரிப்பு, செய்தி வழங்குதல், செய்தித்தொடர்பு ஆகியவற்றிக்கு இன்றைய பத்திரிக்கையாளர்களுக்கு நாரதர் ஒரு பெரும் எடுத்துக்காட்டு.
-Article by ராஜா பரத்வாஜ்