தேனியில் ஹிந்து பெண்ணை காதல் திருமணம் செய்ததால், இறந்தவர் உடலை கிறிஸ்தவ கல்லறையில் ஊர் முக்கியஸ்தர்கள் புதைக்க அனுமதி மறுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிறகு, ஊர் முக்கியஸ்தர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதோடு, போலீஸாரின் சமரசத்தால் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டது.
தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர் – லிகோரியா. இவரது மகன்களில் ஒருவரான ஆரோன், ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்து கொண்டார். எனவே, ஊர் முக்கியஸ்தர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், ஜான் பீட்டர் குடும்பத்தினர் மன்னிப்புக் கேட்டவில்லை. இதனால், ஜான் பீட்டர் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த ஊர் முக்கியஸ்தர்கள், தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்குச் செல்லவும் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில், ஜான் பீட்டர் திடீரென உயிரிழந்து விட்டார். இதையடுத்து, அவரது உடலை ஊருக்குப் பொதுவான கிறிஸ்தவ கல்லறையில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், ஊர் முக்கியஸ்தர்கள் பொது கல்லறையில் புதைக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், ஆரோனா தான் செய்த தவறுக்காக ஊர் முக்கியஸ்தர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட வேண்டும். அப்போதுதான், கல்லறையில் உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என்று கூறியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, ஆரோனும் ஊர் முக்கியஸ்தர்கள் காலில் விழுந்திருக்கிறார்.
ஆனாலும், ஊர் முக்கியஸ்தர்கள் மனமிறங்கவில்லையாம். இந்த சூழலில், மேற்படி விவகாரம் போலீஸாருக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, டி.எஸ்.பி. தலைமையிலான போலீஸார் கோட்டூர் பகுதிக்கு வந்து கிறிஸ்தவ மத ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகரிடம் சமரச பேச்சுவார்த்தியைல் ஈடுபட்டனர். இதன் பிறகே, ஜான் பீட்டர் உடலை பொது கல்லறையில் புதைக்க அனுமதி வழங்கப்பட்டது. இறந்தவர் உடலை கல்லறையில் புதைக்க மறுத்த இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.