திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு அவலநிலைகள் தொடர்ந்தாலும், பஸ்ஸுக்குள் மழை பெய்யும் சோகம் மட்டும் தீர்ந்தபாடில்லை. தேனியில் நடந்த சம்பவம் இதை வெட்ட வெளிச்சம்போட்டு காட்டி இருக்கிறது.
தமிழகம் முழுவதுமே இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் ஏராளமானவை படுமோசமாக இருந்து வருகின்றன. குறிப்பாக, நகரப் பேருந்துகளின் நிலை அந்தோ பரிதாபம்தான். ஓட்டை உடைசலுமாக இருந்து வருகின்றன. சமீபத்தில் சேலம் பகுதியில் இயங்கப்பட்ட அரசு நகரப் பேருந்தின் மேற்கூரை பலத்த காற்றில் பெயர்ந்துகொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, பாதி வழியில் பிரேக் டவுனாகி நிற்பதும், டயர் வெடித்து நிற்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
அந்த வகையில், தேனி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு நகரப் பேருந்துகளும் படுமோசமான நிலையில் இருந்து வருகின்றன. இந்த சூழலில், தேனி மாவட்டத்தில் பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால், கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் மேற்கூரையில் இருந்து மழைநீர் பேருந்துக்குள் கொட்டுகிறது. ஆகவே, பஸ் டிரைவர் கண்டக்டர்களும், பயணிகளும் நனைந்துக் கொண்டே பேருந்தை இயக்கி வருகின்றனர். அவசரத்திற்காக குடை வைத்திருக்கும் சிலர், பேருந்துக்குள்ளேயே குடைப் பிடித்தபடி பயணம் செய்து வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.