100 பவுன் வரதட்சணை கொடுத்தும் இருமுறை ‘தலாக்’: கணவர் தவ்பீக் அகமது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு!

100 பவுன் வரதட்சணை கொடுத்தும் இருமுறை ‘தலாக்’: கணவர் தவ்பீக் அகமது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு!

Share it if you like it

தேனி அருகே ஓய்வுபெற்ற டி.எஸ்.பி.யின் டாக்டர் மகளிடம் 100 பவுன் நகைகள், பல லட்சம் ரொக்கம், 6 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக வாங்கிக் கொண்டு, இருமுறை ‘தலாக்’ கூறியதால், அப்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து அவரது டாக்டர் கணவர் தவ்பீக் அகமது உள்ளிட்ட 7 பேர் மீது மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

தேனி அருகேயுள்ள பழனிச்செட்டிபட்டியைச் சேர்ந்தவர் குலாம். ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. இவரது மகள் ஷகிலா பாத்திமா டாக்டருக்கு படித்திருக்கிறார். இவருக்கும் டாக்டரான கீழக்கூடலுாரைச் சேர்ந்த அப்பாஸ் மகன் தவ்பீக் அகமதுவுக்கும் 2020 மார்ச் 2-ம் தேதி திருமணம் நடந்தது. அப்போது, ஷகிலா பாத்திமா தரப்பில் வரதட்சணையாக 100 பவுன் நகைகள், பல லட்சம் ரூபாய் ரொக்கம், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், தான் மருத்துவம் படிக்க 1 கோடி ரூபாய் செலவானதாகக் கூறி, ஷகிலா குடும்பத்தினரிடம் கூடுதலாக வரதட்சணை கொடுக்கும்படி தவ்பீக் அகமது குடும்பத்தினர் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், ஷகிலா பாத்திமா பெற்றோர் தரமறுக்கவே, கணவர் தவ்பீக் அகமது, மாமனார் டாக்டர் அப்பாஸ், மாமியார் ஜெரினா, நாத்தனார் மூபிதா, அவரின் கணவர் ஜமேஷ் (மென்பொருள் பொறியாளர்), மகள் ரிப்கா (மருத்துவக் கல்லுாரி மாணவி), நாத்தனார் பவுமிதா ஆகியோர் சேர்ந்து ‘வீடு, 50 பவுன் நகைகள், கார் ஆகியவற்றை வாங்கிவரும்படி கூறி ஷகிலாவை துன்புறுத்தி இருக்கிறார்கள். மேலும், ஷகிலா பாத்திமாவின் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை விதிகளுக்கு மாறாக அறிந்துகொள்ள தவ்பீக் அகமது கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதற்கு ஷகிலா மறுத்ததால், அவரை அடித்து துன்புறுத்தியதோடு, அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்து விட்டார்.

இதன் பிறகு, 2021 ஜனவரி மாதம் 22-ம் தேதி ஷகிலாவுக்கு குழந்தை பிறந்த நிலையில், அக்குழந்தையை பார்க்கவும் கணவரும், கணவர் குடும்பத்தினரும் வராததோடு, கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டி இருக்கிறார்கள். தவிர, 2023 மே மாதம் 4-ம் தேதி தவ்பீக் அகமது, தனது மனைவி ஷகிலாவிடம் ஒரே நேரத்தில் இரு முறை ‘தலாக’ கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷகிலா பாத்திமா தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஆனால், அவரை காப்பாற்றிய தந்தை குலாம், இதுகுறித்து தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் அளித்தார். இதன் பேரில், ஷகிலா பாத்திமா கணவர் தவ்பீக் அகமது உள்ளிட்ட 7 பேர் மீது அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Share it if you like it