தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்திற்கு தனது உறவினர்களை அழைத்து வந்ததோடு, மாவட்ட பஞ்சாயத்துத் தலைவரை என்ன ம…த்துக்கு என்று அவதூறான வார்த்தைகளால் பேசியதோடு, இதை தட்டிக்கேட்ட அவரது கணவரை போய்யா… வாய்யா… உட்காருய்யா என்று ஒருமையில் திட்டிய தி.மு.க. கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளன. இதில் 10 வார்டுகளை தி.மு.க.வும், 3 வார்டுகளை காங்கிரஸும், ஒரு வார்டில் ம.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. பின்னர் நடந்த மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் தமிழ்ச்செல்வியும், போட்டி வேட்பாளராக கனிமொழியும் களமிறங்கினர். இதில், தமிழ்ச்செல்வி வெற்றி பெற்றார். இதன் பிறகு மாவட்ட பஞ்சாயத்துக் கூட்டம் 2 முறை கூடியிருக்கிறது. இந்த 2 முறையும் 6-வது வார்டு கவுன்சிலரான கனிமொழி, தேவையில்லாமல் பேசியதால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும், தனது ஆதரவு கவுன்சிலர்களை சென்னைக்கு அழைத்துக் கொண்டு சென்று மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் தமிழ்ச்செல்விக்கு எதிராக கட்சித் தலைமையிடம் புகார் அளித்தார். ஆனால், தி.மு.க. தலைமை நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து கனிமொழி போட்டி வேட்பாளராக களமிறங்கியதால், கட்சித் தலைமை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், மாவட்ட பஞ்சாயத்தின் 3-வது கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்துக்கு வந்த கவுன்சிலர் கனிமொழி, கூடவே தனது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களை அழைத்து வந்திருந்தார். கூட்டம் தொடங்கியதும், வழக்கம்போல வேண்டுமென்றே தேவையில்லாத கேள்விகளை எழுப்பிய கனிமொழி, ஒருகட்டத்தில் தலைவர் தமிழ்ச்செல்வியை என்ன ம…த்துக்கு என்றும் தகாத வார்த்தைகளாலும் பேசத் தொடங்கினார். மேலும், அவரது கணவரைப் பற்றியும் அவதூறாகப் பேசினார். இதை தமிழச்செல்வியின் கணவர் தட்டிக்கேட்டார். அதற்கு அவரது கணவரை யோவ் உட்காருய்யா… வாய்யா… போய்யா என்று ஒருமையில் திட்டினார். அப்போது, கூட்ட அரங்கினுள் இருந்த கனிமொழியின் ஆதரவாளர்களும், உறவினர்களும் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் தமிழ்ச்செல்வின் கணவரை அடிக்கப் பாய்ந்ததோடு, தமிழச்செல்வியையும் தரக்குறைவாக திட்டினர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நீடித்தது. பின்னர், போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினார்கள். இதன் பிறகு, தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் முடிவடைந்தது.
இதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் தமிழ்ச்செல்வி, “மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிட்ட என்னை எதிர்த்து கனிமொழி போட்டியிட்டார். இதில், நான் வெற்றபெற்று, அவர் தோல்வியடைந்ததால் என் மீது வன்மத்துடன் செயல்படுகிறார். மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்துக்கு தனது ஆதரவாளர்களையும், உறவினர்களையும் அழைத்து வந்து வன்முறையில் ஈடுபடும் நோக்கில் செயல்பட்டது வேதனையாக இருக்கிறது. அவரது நடவடிக்கை குறித்து கட்சித் தலைமையிடம் புகார் அளிப்பேன். அதேபோல, கூட்டத்துக்கு வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் என்னை அவதூறாக பேசினார்கள். இது குறித்தும் போலீஸில் புகார் அளிப்பேன்” என்றார்.